முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு களத்தில் 6000 க்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்கள்!

முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

களத்தில் 6000 க்கும் அதிகமான
தேர்தல் கண்காணிப்பாளர்கள்!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பில் அறுபதுக்கு அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் அரச சொத்துக்கள் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தடவைத் ஜனாதிபதித் தேர்தலை  சுதந்திரமானதும் நீதியானதுமாக நடத்தி முடிப்பதற்கான விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும், 6000 க்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பெப்ரல் அமைப்பு விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 12,845 நிலையங்களில் இடம்பெறவுள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் காண்காணிப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்களிப்புப் பிரிவையும் உள்ளடக்கும் வகையில்  அனுபவம் 4 வாய்ந்த கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய வகையில் 160 நடமாடும் வாகன சேவைகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று பிரச்சினைக்குரியவையாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் 50 விசேட  நடமாடும் வாகனங்களைப் பணியில் அமர்த்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன்.

இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக  ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் தேர்தல் அலுவலகங்கள் மூலம்  நிறுவப்பட்டுள்ள தேர்தல்  முறைப்பாட்டு நிலையங்களுக்கும் கண்காணிப்பாளர்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டு நிலையங்களுக்கென கொழும்பு மாவட்டத்துக்கு 2 பேரும், ஏனைய மாவட்டங்களுக்கு  ஒருவர் வீதம் மொத்தமாக 26 பேரையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் முடிவடைந்த பின்னரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தேர்தல் முடிவடைந்த திகதியிலிருந்து இரண்டு வார காலத்துக்கு முன்னெடுக்கப்படும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் கடந்த 14ஆம் திகதி வரையில் 64 முறைப்பாடுகள் பெப்ரல் அமைப்புக்குக்  கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைபாடுகளில் அரச உத்தியோகத்தர்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள், அரச உத்தியோகத்தர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்படல், அரசியல் நோக்குடன் அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல், சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பெப்ரல் அமைப்புக்கு கிடைக்கப்பெற்ற அதிகளவான முறைப்பாடுகள்  அரச சொத்துக்களையும் , அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்ததுடன் தொடர்புபட்டவையாகும். அரச சொத்துக்களையும் அதிகாரத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துதல் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட  முறைப்பாடுகளுடன்  இந்த வருடம் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை ஒப்பிடும்போது அதன் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 2014.11.21 ஆந் திகதியிலிருந்து 2014.12.07 ஆந் திகதி வரையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 05 ஆக இருந்தது. இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்  2019.09.27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது முதல் 2019.10.14ஆம் திகதி வரையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

ஆகவே, இம்முறை தேர்தலில் பெப்ரல் அமைப்புக்குக் கிடைக்கின்ற  முறைப்பாடுகளை ஆராய்வதற்கென்று  விசேட தேர்தல்  கண்காணிப்புப் பிரிவொன்றை ஸ்தாபிக்கவும்  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த  சட்டத்தரணிகள் 20 பேரைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேர்தல்கள் திணைக்களம், இலஞ், ஊழல் பற்றி முறைப்பாடுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுக்குக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளைச் சமர்ப்பித்து அந்த நிறுவனங்களின் புலனாய்வு நடடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தேவைப்படும்  பட்சத்தில்  சட்ட நடவடிக்கைகளில்  ஈடுப்படுவதற்கும் பெப்ரல்  அமைப்பு  தீர்மானித்துள்ளது – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்