கோட்டாபயவை கைது செய்வதற்கான நடவடிக்கை என்னாலேயே தடுக்கப்பட்டது: விஜயதாஸ

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சில சட்டமா அதிபர்கள் எடுத்த முயற்சி, தான் தலையிட்டதாலேயே கைவிடப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு யாருடனும் அரசியல் தொடர்பாக முரண்பாடுகள் கிடையாது. நான் இந்த அரசியல் செல்வாக்கின் ஊடாக எனது வாழ்க்கையை கொண்டு நடத்தவில்லை.

அந்தவகையில்  எனக்கு மாத்திரமல்ல இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் முக்கிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

அதாவது ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னர் முதலில் நாட்டை பாதுகாக்க  அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எனவே நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அனைவரும் இவ்வாறான விடயங்கள் அனைத்தையும் கவனத்திற்கொண்டு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் கோட்டாபயவை வெற்றிபெற செய்வதின் ஊடாக உரிய தீர்வை பெற முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை தடுப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர், அமைச்சர் ராஜித சேனரத்னாவின் வீட்டில் கடிதமொன்றை தயார் செய்திருந்தார்கள்.

இதனூடாக கோட்டாபய, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருந்தார்.

அப்போது நான் நீதியமைச்சராக இருந்தேன். இவ்விடயம் குறித்து பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் ஊடாக நான் அதனை தடுத்து நிறுத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்