இந்திய அதிகாரிகள் முன்னிலையில் பகிரங்க வேண்டுகோள் விடுத்த மாவை!

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க உதவுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இந்திய அதிகாரிகள் முன்னிலையில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றதைப் போன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நேற்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு முதலாவது விமான சேவையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் எயர் சென்று தரையிறங்கியது. எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் ATR 72-600 விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாகத் தரையிறங்கியது.

இந்த விமானத்தில் எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லொஹான, அலையன்ஸ் எயர் தலைமை நிறைவேற்று அதிகாரி சுப்பையா உள்ளிட்ட 30 பேர் பலாலியில் இறங்கினனர்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மயிலிட்டி பகுதி மக்களின் காணிகள் இன்றுவரை விடுவிக்கப்பட்டாமை தொடர்பாகவும் சிறிலங்கா ஜனாதிபதி – பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.

பலாலியில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் காணப்படும் நிலங்களுக்கு சொந்தக்காரர்களான தமிழர்களிடம் அவர்களது நிலங்களை விரைவில் கையளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்