திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்!

திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குடும்பமொன்றுக்கு அடிமைப்பட்ட நாடொன்றை உருவாக்குவதா, இல்லையா என்ற தீர்மானத்தை நாட்டு மக்கள் என்ற ரீதியில் நாம் எடுக்க வேண்டும்.

இந்த குடும்பம் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவா நாட்டின் எதிர்காலப் பயணம் தீர்மானிக்கப்படும்? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் எமது தாய் நாட்டின் அரச நிர்வாகத்தின் புதிய அத்தியாயத்தை நாம் உருவாக்குவோம்.

அரசியல் ரீதியில் நெருங்கிய நண்பர்களின் சங்கங்களுக்கு சலுகைகளை, பதவிகளை வழங்கிய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி, தூய்மையான, முறையான அரச நிர்வாகத்தின் ஊடாக நீங்கள் வெற்றிபெறும் தாய் நாட்டை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புச் செய்வோம்.

இனிவரும் காலங்களில் குடும்பப் பெயர்களுக்காக பதவிகளை வழங்குதல், நெருங்கியவர்களுக்கு பொறுப்புக்களை வழங்குதல் ஆகிய அரசியல் முறைகளை முற்றாக மாற்றுவோம்.

எமது தாய் நாட்டை பலமான தேசமாக மற்றுவதே எமது நோக்கமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்