கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை!

நாட்டில் பல்வேறு கல்வி அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், பல பாடசாலைகள் வளங்களற்ற நிலையில் இயக்குகின்றமைக்கு கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சான்று பகிர்கின்றது.

ஓர் பாடசாலைக்கு இருக்க வேண்டிய பௌதீக வளங்களை குறித்த பாடசாலை இழந்து காணப்படுவதால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கிராமப்புற பாடசாலை என்பதால் புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பாடசாலையில் வகுப்பறைகள் தரம் பிரிக்கப்படாது, தரப்பாள் கொண்டு குறித்த வகுப்பறைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் தங்களின் கற்றல் நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று குறித்த பாடசாலையில் காணப்படும் நூலகம் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதாகவும் மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த பாடசாலையில் விளையாட்டு துறையில் சாதிக்கக்கூடிய மாணவர்கள் காணப்படுகின்ற போதிலும், பௌதீக வளங்கள் சீரின்றி காணப்படுவதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையின் பௌதீக வளங்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பாடசாலை ஆசிரியர்கள் தெரித்துள்ளனர்.

மேலும் குறித்த பாடசாலை தொடர்பில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு பௌதீக வள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என அப்பிரதேச மக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்