குருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்

குருநகர் மாநகர சந்தைக் கட்டடத்தொகுதிக்கு யாழ் மாநகர முதல்வர் நேற்று (18) நேரடிக் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

குறித்த நேரடி விஜயத்தில் மீன் வியாபாரிகளை சந்தித்து அவர்களின் குறைபாடுகள், தேவைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி அறிந்து கொண்டார். வியாபாரிகள் சந்தைக் கட்டடத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் முதல்வரிடம் விளக்கினர்.

மீன் வெட்டி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் அவர்கள் மருத்துவச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறியிருந்தார். உடனடியாக அச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் மாநகரசபை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை வலியுறுத்தி கூறியிருந்தார்.

மேலும் பொலித்தீன் பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறும் துணிகளினால் அமைக்கப்பட்ட, பணை உற்பத்தியால் அமைக்கப்பட்ட பைகளை பயன்படுத்துமாறும், வாடிக்கையாளர்களை பைகளை எடுத்துவருமாறு குறிப்பிட்டு அதனை நடைமுறைப்படுத்துமாறும் குறிப்பிட்டார்.

இறுதியாக சந்தைக் கட்டடத் தொகுதியில் உள்ள மின்சார, கட்டுமான, தண்ணீர் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கான செலவு மதிப்பீடுகளை தன்னிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்று விரைவாக தேவைகளை பூர்த்தி செய்து வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகர பொறியியலாளருக்கும், சந்தை மேற்பார்வையாளருக்கும் பணிப்புரை வழங்கினார்.

தங்கள் குறைகளை நேரடியாக கேட்டு அறிந்து கொண்ட முதல்வருக்கு வியாபாரிகள் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்