மகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் !

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் குதிரையை புதிய ஜனநாயக முன்னணி நிறுத்தியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி ஹாரிஸ்பத்துவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிய இரண்டு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில், 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார்.

நாட்டை நிர்வகிக்க முடியாத காரணத்தினாலேயே அவர் தேர்தலுக்கு சென்றார். இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் போது எவரும் தேர்தலை நடத்த மாட்டார்கள்.

2015ம் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு பொருளாதார தடைகளை விதிக்கவிருந்தது.

பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருந்தால், எமது தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியாது. பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது.

அவரது ஆட்சிக்காலத்தில் நாட்டில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர். வெள்ளை வான் கலாசாரம் பிரபலமடைந்தது. தொழிற்சங்கவாதிகள் கடத்திச் செல்லப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். பிரதம நீதியரசரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கினர்.

இப்படியான பல சம்பவங்கள் காரணமாக 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக மூன்று யோசனைகள் நிறைவேற்றப்பட்டன.

மகிந்த ராஜபக்ச 2015ம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கும்.

அன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்று தேர்தலை நடத்தி விட்டு வீட்டுக்கு சென்ற நபர், இன்று மேடைகளை பல்வேறு விதமாக கருத்துக்களை முன்வைத்து கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து உங்களை மீண்டும் ஏமாற்ற முயற்சித்து வருகிறார் என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்