பதினைந்து வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் 15 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்திய 19வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனையும் உடந்தையாக இருந்த பெண்ணையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வலிகாமத்தை சேர்ந்த 15வயது பாடசாலை மாணவிக்கும், 19வயது முஸ்லிம் இளைஞனிற்குமிடையில் காதல் ஏற்பட்டு, பெண்ணின் உறவினர் வீடொன்றில் அவர்கள் தங்கியிருந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாணவியையும் இளைஞனையும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாணவியை மருத்துவ சோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் இளைஞனும் அவருக்கு தங்குமிடம் வழங்கி உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

அத்துடன், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இளைஞனையும் பெண்ணையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், பெண்ணின் கைக்குழந்தையை சிறைச்சாலையில் தாயார் வைத்திருக்கவும் அனுமதியளித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்