தமிழ் மொழி நிர்வாக மொழியாக மாற்றமடைந்தமைக்கு புலிகளின் போராட்டமே காரணம்- மனோ கணேசன்
சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் நிர்வாக மொழியாக மாற்றமடைந்தமைக்கு விடுதலைப்புலிகளின் போராட்டமே காரணமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளமை தொடர்பாக இனவாத கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் இன்றைய அரசியலமைப்பின்படி இலங்கையின் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் ஆகும். இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும்.
சட்டப்படி சமமான ஆட்சி – தேசிய மொழிகள் என்பதற்காக பெயர்பலகைகளில் ஒன்றின் மீது ஒன்றை எழுத முடியாது. ஆகவே வரிசையாக எழுத வேண்டும்.
அதாவது வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்றும் எழுத வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு பிரதேச செயலக பிரிவில் அந்த மாகாணத்தில் பெரும்பான்மையோர் பேசுகின்ற மொழியை தவிர்ந்த அடுத்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்ந்தால் இந்த வரிசை மாறலாம்.
ஆனால் ஆங்கிலம் எப்போதும் மூன்றாம் இடத்திலேயே எழுதப்பட வேண்டும். இவ்வாறுதான் இலங்கை அரசியலமைப்பில் மொழி தொடர்பான 4ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 1987 ஆம் ஆண்டு 13ம் திருத்தம் ஊடாக மாகாணசபைகளாக அதிகாரப்பகிர்வு வந்தது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1988 ஆம் ஆண்டு 16ம் திருத்தம் ஊடாக இந்நாட்டில் தமிழும் ஆட்சி மொழியாக மாறியது.
இவை இரண்டும் இலங்கை அரசியலமைப்பில் கொண்டுவரப்படுவதற்கு புலிகளின் போராட்டமே மூல காரணமாக இருந்தது. துணை காரணமாக இந்திய அரசு காணப்பட்டது.
இன்றும் இந்த இரண்டு திருத்தங்களையும் காப்பாற்றி முன்நகர்த்த எம்மால் முடியும். அதை நோக்கியே நான் செயற்படுகிறேன்.
இந்த தெளிவு அனைத்து தமிழ் மக்களிடத்திலும் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை