பாதாள உலகக் குழுவினரை முழுமையாக இல்லாது செய்வேன்- கோட்டா உறுதி

ஜனாதிபதியாக தான் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றியவுடன், பாதாள உலகக் குழுவினரை முழுமையாக இல்லாது செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நான் தற்போது இங்கு வரும்போது, மக்களை சந்தித்தேன்.  இவர்கள் அனைவரும் பாதுகாப்பான நாடொன்றை வழங்குமாறுதான் எம்மிடம் கோரிக்கை விடுக்கிறார்கள்.

யுத்தத்தை நாம் நிறைவுசெய்த பின்னர், தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாத அமைப்புக்களை கண்காணிக்க விசேட குழுக்களை நியமித்திருந்தோம். இதற்காக அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகளையும் வழங்கியிருந்தோம்.

எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் நாட்டின் தேசியப் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு தெளிவுப்படுத்தலும் இவர்களுக்குக் கிடையாது. இதன் பலனைத்தான் நாம் ஈஸ்டர் தினத்தன்று தெரிந்துக்கொண்டோம்.

நாம் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நாம் மீண்டும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவோம்.

அன்று நாம் பாதாள உலகக் குழுக்கள், போதைப்பொருள் வர்த்தகங்களை இல்லாது செய்திருந்தோம். இந்த செயற்பாட்டையும் நாம் மீண்டும் ஆரம்பிப்போம்.

எமது நாடு தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. எம்மைப் பொறுத்தவரை நாட்டை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பிரதான நோக்கமாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்