தொடர்ந்தும் அச்சுறுத்தல்-பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்கிறார் சிவாஜிலிங்கம்

தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தபோதிலும் தனது பாதுகாப்பு விடயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அத்தோடு தொடர்ந்தும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுகிழமை)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லையென்றும் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தும் எதுவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் தனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

போட்டியிடும் 35 வேட்பாளர்களுக்கும் பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்

கட்டுப்பணம் செலுத்திய நேரமுதல் தனக்கு கைத்தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து தனது கைத்தொலைபேசியினை சிறிது நாட்கள் இயங்காது நிறுத்தி வைத்திருந்தாகவும் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த தேசம் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமே தவிர சிறுபான்மையினருக்கு வழங்காது என குற்றம் சுமத்தியுள்ள அவர், எதிர்வரும் செவ்வாய்கிழமை வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்று தேர்தல் ஆணைக்குழு தவிசாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும் அச்சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக தெளிபடுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக 23ஆம் திகதி தனது எதிர்கால அரசியல் நகர்வு தொடர்பாக என்ன செய்யப்போகின்றேன் என்பதனை ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்