தேர்தலை புறக்கணிக்கச் சொல்கின்றமை இனத்தை தற்கொலைக்கு தள்ளுவதாகும்!

நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதில் பிரதான கட்சிகள் இரண்டிலும் போட்டியிடுபவர்கள் ஒன்று பேய், மற்றவர் பிசாசு என்று இருந்தாலும், பிசாசு கடந்த காலத்தில் ஆடிய மனித இரத்தம் குடித்த வெறியாட்டத்தையும் தமிழர்கள் எளிதில் மறப்பவர்கள் அல்லர். பேய்க்கு ஆதரவளிக்க தமிழர் முன்வந்தாலும் பெரும்பான்மை இனவாத சக்திகள் ஒன்றுதிரண்டு பிசாசுக்கு ஆதரவளிப்பர். இந்த இடத்தில் நாம் மிகவும் கவனமாகச் செயற்படவேண்டும்.

இறுதியில் மூன்று கட்சிக்கூட்டாக இருந்த கூட்டமைப்பைப் பல்கலை மாணவர்கள் இந்தத் தேர்தலுடன் 5 கட்சிக்கூட்டாக – தமிழர்களின் ஏக முடிவெடுக்கும் ஏக பிரதிநிதிகளாக – ஆக்கியிருக்கின்றார்கள். பல்கலை மாணவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.

கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு கோரிக்கைகளை முன்வைத்தபின்னர் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், ”ஜனாதிபதி வேட்பாளர் எவருடன் பேசினாலும் ஐந்து கட்சிக் கூட்டாகவே பேசுவோம்” என்றார். அதன்பின்னர் கடந்தவாரமும் முன்னாள் முதல்வர் விக்கி ஐயாவை ரணில் பேசவருமாறு அழைத்தபோது ”தனித்து வரமாட்டேன் ஐந்துகட்சிக் கூட்டாகவே வருவேன்” என்றார். உண்மையில் இந்த விடயங்கள் – எமது தலைமைகளின் ஒற்றுமை – பாராட்டப்படத்தான் வேண்டும்.

எதற்கும் உருப்படாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் கடாசி குப்பைக்கூடைக்குள் போட்டபின்னரும் – தாம்தான் ஏதோ தமிழ் மக்களுக்காக வாழ்பவர்கள் என்றும் தாம்தான் புனிதர்கள் என்றும் கூறிக்கொண்டு தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னார்கள். இவர்கள் உள்ளூராட்சி மன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றும் மக்களுக்காக எதையும் ஆற்றவில்லை. அது மக்களுக்கும் நன்கு தெரியும்.

தேர்தலைப் புறக்கணிக்கும்படி ஒருவன் அறிவிப்பானாயின் ஒன்றில் அவன் சித்தசுவாதீனமுள்ளவனாக இருப்பான், அல்லது மதுபோதையில் உழறிய உழறலாக அது இருக்கலாம். அல்லாவிடில் கோத்தாவிடம் பணம்பெற்றுவிட்டு அவ்வாறு பேசலாம்.

இந்த முட்டாள்கள் தற்போது தாம் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணித்தமையை உதாரணம் காட்டுகின்றார்கள். ”உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா”, ”முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் வெள்ளைக் கொக்காகுமா?” இந்த ஊர்க்குருவி சைக்கிள் அணி விடுதலைப் புலிகளின் பெயரை வெளியே பாவித்து தம்மைப் புனிதர்களாக காட்டினாலும் அவர்களின் உள் அழுக்காற்றை மக்கள் நன்கு தெரிந்து இவர்கள் ஊர்க்குருவி, காகம் என்று உணர்ந்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னார்கள் அப்போதிருந்த நிலைமை வேறு. இலங்கை அரசக்கு சமானமான ஒரு தமிழரசை அவர்கள் உருவாக்கியிருந்தார்கள். வடக்குக் கிழக்கில் நிர்வாக அலகு, நீதித்துறை, நிதித்துறை, பொருண்மியத்துறை என்பவற்றுடன் கடல், ஆகாயம், தரை என்ற முப்படைகளையும் கொண்டு ஒரு தனிநாடு உருவாவதற்கான அத்தனை சிறப்புக்களும் இங்கிருந்தன. அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னார்கள். அதில் அர்த்தம் நிறைந்திருந்தது. மக்களும் அவர்கள் கோரிக்கையை ஏற்று அடிபணிந்தார்கள். பேச்சு மேசைக்கு அவர்கள் செல்லும்போது இரு அரசுகளுக்கிடையிலான பேச்சு என்ற கம்பீரத்துடன் சென்றார்கள். இலங்கை அரசும் அவர்களுடன் பயந்துதான் பேச்சில் ஈடுபட்டது.

யுத்த காலத்தில் தமிழ் பிரதேசத்தில் எமது மக்களுக்கு ஒரு அடிவிழுந்தால் அதற்குப் பதிலானதும் சமனானதுமான தாக்கத்தை தென்னிலங்கையில் உணரவைத்தார்கள் புலிகள். அப்போ அப்படி இருந்தவர்கள் எமது தமிழினம்.

ஆனால், தற்போது நிலைமை அவ்வாறில்லை. நாங்கள்எ மதியுடன்தான் செயற்படவேண்டும். சாணக்கியமாகத்தான் எமது உரிமைகளைப் பெறவேண்டும். அதையே கூட்டமைப்புத் தலைமை ஆற்றுகின்றது. சும்மா வீறாப்பு வசணம் பேசி மக்களின் உள்ளுணர்வைத் தட்டுவது இலகு! மேடைப்பேச்சில் கைதட்டும் வாங்கலாம்.

ஏன், இதே தமிழ்த் தேசிய முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் 2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அரசுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுவிட்டு யாழ்.வந்தபோது அவர்களை இளைஞர்கள் பளையிலிருந்து தோளில் சுமந்துவந்து நல்லூரில் மாபெரும் கூட்டம். அப்போ பல்கலை மாணவர் சமூகம் சார்பில் அதன் செயலாளராக இருந்த கஜேந்திரன் உரையாற்றும்போது ”60 ஆயிரம் சவப்பெட்டிகளை தயார்ப்படுத்துங்கள். 60 ஆயிரம் இராணுவத்தையும் கொன்று குவிப்போம்” என்றார். வானைப் பிளந்த கைதட்டு. பல இளைஞர் யுவதிகள் அவரின் உசுப்பேத்தலால் புலிகள் இயக்கத்தில் இணைந்து இன்று மாவீரர். ஆனால், கஜேந்திரன், 2002 இல் இருந்த கஜேந்திரன் போன்று உடலில் ஒரு சின்ன வடுவுமின்றி முழு உருவமாக இப்போதும் இருக்கின்றார். 2009 ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரும் இப்போதைய ஜனாதிபதி வேட்பாளருமாகிய கோத்தாவின் காலில் சரணாகதியடைந்து தன் தம்பியைக் காப்பாற்றி வெளியே எடுத்தார். இப்ப அவர் அவரது கட்சி தமிழ் உணர்வாளர்களாம். தேர்தலைப் புறக்கணிக்கட்டாம்.

சாதாரணமாக ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கூட்டல் தெரிந்த எவனும் தேர்தல் கணக்கைக் கூட்டிப் பார்ப்பானாயின் வடக்கு – கிழக்கு மக்கள் வாக்களிக்காவிட்டால் கோட்டாவுக்கு வெற்றி உறுதி என்பதைக் கணிப்பான். தேர்தலைப் புறக்கணிப்பதும் கோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்று என்பது சித்தம் கலங்காத எவனுக்கும் புரியும்.

இன்று அருந்தவபாலனும் தன்னிச்சையாக ஓரு முடிவை அறிவித்திருக்கின்றார். 5 கட்சிகள் முன்வைக்கின்ற கோரிக்கையை ஏற்கத் தவறின் தேர்தலை புறக்கணிப்போம் என்பது அவரின் கருத்து. நான் நினைக்கின்றேன் இவ்வாறான ஒரு முட்டாள் தனமான கருத்து அவருடைய தனிப்பட்டதாகத்தான் இருக்கும்.

ஐந்து கட்சிகள் கூட்டாக முன்வைத்த கோரிக்கையை நான் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாகிய சஜித், கோட்டா இருவரிடமும் முன்வைப்போம். அவர்களில் யார் சாதகமாகப் பரிசீலிக்கின்றார்களோ அவர்களுக்கு எமது – தமிழ் மக்களின் – ஆதரவுத் தளத்தை வழங்குவோம். மாறாக இருவரும் தவறுவார்களாயின் மக்கள் சுயமாகவே முடிவெடுக்கட்டும்.

வாக்குரிமை ஒரு மனிதனின் ஜனநாயக உரிமை. அதைத் தடுக்கும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. விடுதலைப் புலிகள் காலம் வேறு. அப்போ நாம் தனிநாட்டுக்குரிய கட்டமைப்புடன் வாழ்ந்தோம். தமிழ்த் தலைமைகள் முன்வைத்த கோரிக்கையை பெரும்பான்மைக் கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கத் தவறின், மக்கள் தம் இஷடப்படி தமக்கு சரியெனப்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கட்டும். வாக்களிக்காமல் விடுவது எமது இனத்தை சாவுக்குழிக்குள் தள்ளுவதற்கு ஒப்பாகும்.

தெல்லியூர் சி.ஹரிகரன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்