ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு?

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தெற்குக்கு மட்டும் உரியது. எவ்வளவுக்கு நாம் தலையால் குத்திமுறிந்தாலும் பெரும்பான்மை ஆட்சியாளர்களே ஜனாதிபதியாக வரப்போகின்றார்கள் என்று ஏனோ தானோ என்று அசட்டையாக நாம் இருந்துவிடல் ஆகாது.

இந்தத் தேர்தல் தமிழ்மக்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதான். இந்தத் தேர்தலை நாம் எவ்வாறு புத்திசாதுர்யத்தோடு எமக்கு சாதகமாகப் பயன்படுத்தப்போகின்றோம் என்பதுதான் நிலைப்பாடு. அறுதிப்பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டவர்களாகத் தென்னிலங்கை மக்கள் காணப்படுகின்றார்கள். சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் ஆதரவு என்று கூட்டமைப்பு அறிவித்தால், உடனே மஹிந்த அன் கோ அதைக் காரணமாக வைத்து, இனத்துவேசத்தைக் கக்கி, ”பிரபாகரன் ஆயுதத்தால் அடைய நினைத்த தமிழீழத்தை சம்பந்தன், சுமந்திரன் மதியால் சஜித்தைப் பயன்படுத்தி அடையப்போகின்றார்கள். நாடு துண்டாடப்படப்போகின்றது. வடக்கு – கிழக்கு தமிழர் தேசமாகவும் தனி நாடாகவும் அமையப்போகின்றது” என்று பெரும் இனவாதப் பூதத்தை ஏவிவிட்டு பெரும்பான்மை மக்களின் வாக்குகளை முழுமையாகக் கோட்டா கைப்பற்றுவார்.

கோட்டா வருவாரானால் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் காணி விடுவிப்பு தடைப்படும், ஐ.நா. தீர்மானம் கடாசி குப்பைக்குள் இடப்படும், காணாமல் போனோர் அலுவலகம் மூடுவிழாக்கண்டு அந்தப் பட்டியல் மேலும் நீண்டு செல்லும் ஏதுநிலை ஏற்படும், வடக்கு – கிழக்கு அபிவிருத்தி அனைத்தும் முடங்கும், அரசமைப்புச் சபையாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டு எமது பிரதிநிதிகளின் கருத்துக்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட புதிய அரசமைப்பு நகல் கிளித்தெறியப்படும். பெரும்பாலும் தமிழ் மக்களுக்கு கோத்தா வருவாரானால் எந்த சாதக நன்மைகளும் கிட்டா என்பது வெள்ளிடைமலை.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் தமிழர்களின் உரிமைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதும், இறுதியுத்தத்தின் பெரும் இனவெறித்தாண்டவமாடிய இரு அரக்கர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நின்றார்கள். ஒருவர் இன்றைக்கும் தெற்கு மக்கள் மத்தியில் ‘பயங்கரவாதத்தை ஒழித்தவன் நான்தான்’ என்று பீற்றுவதன் ஊடாக அவர்கள் மத்தியில் நிலையான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ. மற்றையவர் மஹிந்தவின் இறுதி யுத்தக்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா. ஒருவர் எமது இனத்தைச் சுட்டுத் தள்ளியவர். மற்றையவர் சுடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர்.

இக்கட்டான சூழ்நிலையிலும் இரண்டு கெட்டவர்களுக்குள்ளும் – எமது இனத்தை கருவோடு அழிக்க நினைத்த இருவருக்குள்ளும் – யாருக்கு வாக்களிப்பது என்று சிந்தித்து பொன்சேகாவுக்கே அதிக வாக்குகள் அளிக்கப்பட்டன அந்தத் தேர்தலில். வடக்கு – கிழக்கில் மஹிந்த ராஜபக்ஷ 3 லட்சத்து 45 ஆயிரத்து 221 வாக்குளைப் பெற, அதே வடக்குக் கிழக்கில் சரத் பொன்சேகா 5 லட்சத்து 71 ஆயிரத்து 67 வாக்குகளைப் பெற்று, மஹிந்தரை விட 2 லட்சத்து 25 ஆயிரத்து 846 வாக்குகள் அதிகமாகப் பெற்றார். இருவரும் எமது இனத்துக்கு விரோதிகள் என்றாலும் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்காமல் வாக்களித்தனர். தென்னிலங்கை மக்களின் அதிகப்படியான வாக்குகளால் மஹிந்த மீண்டும் ஜனாதிபதி ஆனார். அந்தத் தேர்தலில் பொன்சேகாவால் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் சகல மாவட்டங்களுடன் நுவரெலியா மாவட்டத்தை மட்டும்தான் தெற்கில் கைப்பற்றக்கூடியதாக இருந்தது.

2015 ஆம் ஆண்டு மூன்றாவது முறையும் தான் ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற நப்பாசையில் மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்களின் ஆதரவை நம்பி தேர்தலில் குதித்தார். வடக்கு -கிழக்கில் டக்ளஸ், அங்கஜன், கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அவருக்கு ஆதரவு வழங்கினர். இந்தத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக எண்ணியது. மஹிந்தவை எவ்வாறாயினும் வீழ்த்தவேண்டும் என்று சந்திரிகா அம்மையார் போன்றோர் தீட்டிய திட்டத்தில் கூட்டமைப்பின் புத்திஜீவி ஒருவரும் இணைந்துகொண்டார். மிகவும் திட்டமிடப்பட்டு, ”கரணந் தப்பினால் மரணம்” என்ற நிலையில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கினர். ரணில் விக்கிரமசிங்க வெற்றி லாயக்கற்றவர் என்பதால், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி, ஐக்கிய தேசியக் கட்சியும் அதற்கு ஆதரவளிக்கும் வகையில் வியூகம் அமைக்கப்பட்டது. மைத்திரிபால களமிறக்கப்பட்டார். தமிழ்த் தலைமைகள் தமது மக்களின் நியாயமான அபிலாஷைகளை அவர் முன்வைத்தனர். ஆனால், எவையும் எழுத்தில் இடம்பெறவில்லை.

எழுத்துமூல உடன்பாட்டுக்கு மைத்திரி அந்தநேரத்தில் தயாராக இருந்தவராயினும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவே அதனை மறுத்தார். அவர் மறுத்தமைக்கான காரணம் அவ்வாறான ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் மறுகணமே மஹிந்தர் அணி தமக்கான பிரசார மூலக் கருவாக அதனைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த தென்னிலங்கை வாக்கையும் பெற்று மஹிந்த வென்றுவிடுவார் என்ற பரந்த பொதுநல சிந்தனையின் அடிப்படையிலேயே சம்பந்தன் ஐயா எழுத்துமூல உடன்பாட்டை நிராகரித்தார். அப்போது, சந்திரிகா அம்மையார், சம்பந்தன் ஐயாவைப் பார்த்துக் கேட்டாராம், ”நீங்கள் இன்னமுமா சிங்களத் தலைமைகளை நம்புகின்றீர்களா? என்று. அதற்கு சம்பந்தன் ஐயா, ”எமக்கு ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம். அதேநேரம் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். உங்கள் அப்பாவின் காலத்திலிருந்தே நாம் ஏமாற்றப்படுகின்றோம். இது எமக்கொன்றும் புதிதல்ல” என்றாராம். வழமைபோன்று தமிழ்மக்களின் அந்நிய சக்தியாகிய – தமிழ்மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நிராகரித்து கட்டுக்காசை இழககின்ற – கஜேந்திரகுமார் கொம்பனி இந்த 2015 ஜனாதிபதித் தேர்தலையும் புறக்கணிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டது. கூட்டமைப்பே தமது ஏக தலைமை என்று ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்கும் மக்கள், கஜேந்திரகுமாரின் கருத்தை ”செவிடன் காதில் ஊதிய சங்கு” போன்றும் ”எருமை மாட்டின்மேல் பெய்த ஜலம்” போன்றும் நோக்கி, மைத்திரியை வெற்றிபெற வைத்த ”கிங்மேக்கர்” ஆகினர் வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு முழுவதுமாக மைத்திரிபால சிறிசேன 9 லட்சத்து 78 ஆயிரத்து 111 வாக்குகளைப் பெற்றார். மஹிந்த ராஜபக்ஷ 3 லட்சத்து 23 ஆயிரத்து 600 வாக்குகளைப் பெற்றார். மைத்திரிபால சிறிசேன 6 லட்சத்து 54 ஆயிரத்து 511 வாக்குகள் மஹிந்தரைவிட அதிகமாகப் பெற்றார். 2010 தேர்தலை விட வடக்கு கிழக்கில் மஹிந்தர் 2015 தேர்தலுக்கு 21 ஆயிரத்து 621 வாக்குகள் குறைவாகப் பெற்றார். ஆனால், 2010 இல் சரத்பொன்சேகா பெற்ற வாக்குகளைவிட 2015 இல் மைத்திரி வடக்குக் கிழக்கில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 44 வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.

மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து, தமிழர்களுக்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறிவிட முடியாது. நாடாளுமன்றம் அரசுமைப்பு சபையாக மாற்றம் பெற்றது, புதிய அரசமைப்பு நகல் உருவாக்க முயற்சிகள் நடைபெற்றன, ஏராளமான மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன, வடக்கு – கிழக்கு பெருமளவு அபிவிருத்திகளைக் கண்டது. ஆனால், இவை எவையும் இறுதிசெய்யப்படவில்லை என்பதுதான் தமிழ்மக்களினதும் தமிழ் அரசியல் தலைமைகளினதும் ஆதங்கம்.

இந்த நேரத்தில் வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் தெற்குக்கான தேர்தல் என்றில்லாது எமக்கு மிகமிக அவசியமானதுதான். அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு நாடாளுமன்றில் வரையப்பட்ட இடைக்கால வரைவு அரசமைப்புப் பணிகள் விட்ட இடத்திலிருந்து மீளவும் நகரவும் – விடுவிக்கப்படாத மீதமுள்ள மக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படவும் – நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கவேண்டிய தேவை தமிழ்த் தலைமைகளுக்கும் மக்களுக்கும் உள்ளது.

ஆனால், இம்முறை தமிழ்த் தலைமை வடக்கு – கிழக்கில் உள்ள போலி புலிவேடம் போட்ட சைக்கிள் தம்பியவையின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூட்டமைப்பு முண்டுகொடுக்கின்றது என்ற பழிச்சொல்லில் இருந்து நீங்கவும், தென்னிலங்கையில் பரபரப்பாக கூட்டமைப்பு ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பைத் தகர்க்கவும் பல்கலை மாணவர்களுக்கு முன்னணியின் உண்மைமுகத்தைக் காட்டவும் கூட்டமைப்புத் தலைமை திட்டமிட்டு, பல்கலை மாணவரின் கருத்தை ஏற்று, நடைமுறைச் சாத்தியங்கள் என்றாலே என்னவென்று தெரியாத கஜேந்திரகுமார் கொம்பனி அதிலிருந்து விலக, 5 கட்சிக் கூட்டாக 13 நிபந்தனைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன் வைப்பதற்கு கூட்டiமைப்புத் தலைமை இணங்கியது.

ஐந்து கட்சிகள் கூட்டாக பல்கலை மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்ட 13 தீர்மானங்களையும் எந்த பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களும் ஏற்கர். அது சம்பந்தன், சுமந்திரனுக்கும் நன்கு தெரியும். மக்களுடைய கருத்தறியாமல் தம் இஷ்டத்துக்கு தெற்குக்கு முண்டுகொடுக்கின்றார்கள் கூட்டமைப்பினர் என்ற பழியில் இருந்து விடுபடுவதற்கும், சைக்கிள் எதற்கும் உதவாது அது வெறும் ”ஏட்டுச் சுரக்காய்” என்பதை பல்கலை மாணவர்களுக்கு புரிய வைக்கவும் இதை நல்ல ஒரு களமாகக் கூட்டமைப்பு பாவித்தது.

தமிழ்மக்களின் வாக்குகளை எப்படியாவது பெறவேண்டும் என்றிருந்த தெற்கின் பிரதான வேட்பாளர்கள் சஜித், கோட்டா இருவரும் இந்த 13 நிபந்தனைகளையும் கண்டு திணறத் தொடங்கிவிட்டார்கள். சஜித் இந்த நிபந்தனைகளை ஏற்பாராயின் பெரும் இனவாதப் பூதம் தெற்கில் கிளப்பிவிடப்பட்டு அவர் தோற்கடிக்கப்படுவார். ஆதலால், அவர் இந்த நிபந்தனைகள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்.

தமிழ்மக்கள் பல துயரங்களை அனுபவித்து மரணத்தின் விளிம்புவரை சென்றவர்கள். அவர்களுக்கு தீர்வு அவசியம்தான். அதனை வழங்குபவர்கள் தென்னிலங்கை மக்களே! அவர்கள் மனம் வைத்தால்தான் எமது தீர்வை நாம் பெறலாம். எமது ஆயுத பலம் மௌனிக்கப்பட்டு விட்டது. இனி நாம் சாணக்கிய வழி ஊடாகத்தான் தீர்வைப் பெறமுடியும். அதற்கு மஹிந்த அரசு ஒருபோதும் இடமளிக்காது. அவர்கள் இனவாதத் தீயில் மூழ்கியவர்கள். சஜித் போன்றவர்கள் ஆட்சிப்பீடம் ஏறினால்தான் அது சாத்தியமாகும். அதற்கு தென்னிலங்கை மக்களுக்கு தீர்வுத்திட்டம் தொடர்பான – புதிய அரசமைப்பு தொடர்பான தெளிவை – அரசும் நாங்களும் வழங்கவேண்டும். இந்த கைங்கரியத்தைத்தான் தென்னிலங்கை மக்கள் மத்தியில் நல்லாட்சிக் காலத்தில் எமது பேச்சாளர் சுமந்திரனும் விக்கிரமபாகு கருணாரட்ணவும் வழங்கினர். அரசமைப்பு தொடர்பான தெளிவை தெற்கு மக்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கடந்த காலங்களில் ஏற்படுத்தினர். ஏனெனில் அரசமைப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் சர்வஜனவாக்கெடுப்புக்கு விடப்படும். அதில் தென்னிலங்கை மக்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறும். ஆகையால், அவர்கள் இது தொடர்பான தெளிவை – அறிவைப் பெறவேண்டும்.

ஆகவே, இந்தத் தேர்தலில் வடக்குக் கிழக்கு மக்களின் நாடிபிடித்துப் பார்த்தளவில் 90 வீத மக்கள் சஜித்துக்கே ஆதரவு. சஜித் வெற்றியை உறுதிப்படுத்த தென்னிலங்கையில் கணிசமான வாக்குகள் தேவை. எமது 5 கட்சிக் கூட்டின் 13 கோரிக்கைகள் பக்கம் எவரும் தலைவைத்துப் படுக்கார். ஆகையால், 5 கட்சிகளும் நடுநிலைமை. எவருக்கும் ஆதரவில்லை. மக்கள் தமக்குப் பிடித்தவருக்கு – தமது அறிவுக்கு சரியெனப்பட்டவருக்கு – வாக்களிக்கட்டும். ஆனால், இந்தக் கட்சிகள் ஒன்றை மட்டும் மக்களுக்குத் தெரிவிக்கும் ”அனைவரும் வாகளிப்பில் ஈடுபடவேண்டும்” என்பதே அது. அவ்வாறு 5 கட்சிகளும் நடக்குமாயின் தெற்கில் இனவாதத்தீ பரவாது. தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு ஐ.தே.க.வுக்கு முண்டு கொடுக்கின்றது என்ற பழி நீங்கும். மக்களே யாரை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பர். இறுதியில் சஜித் தமிழ்மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி ஆவார். இதுவே புத்திசாலித்தனம்.

தெல்லியூர் சி.ஹரிகரன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்