சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்…

சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கோட்டபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சிறுபான்மை சமூகத்தின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.                                                                         வடமாகாண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டு அம்மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

வடக்கு மாகாணத்தை சேர்ந்த மக்களும் இந்நாட்டு மக்களே அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் பின்நிற்க மாட்டோம் என கோட்டபாய உறுதியளித்துள்ளார். கோட்டபாய ராஜபக்ச அதிகாரி என்ற அடிப்படையில் அவரை நம்பமுடியும். அரசியல்வாதிகள் என்பவர்கள் ஒன்றை சொல்வார்கள் ஒன்றை செய்வார்கள். ஆனால் கோட்டபாய அப்படி இல்லை.

யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனுடன் இணைந்து வடக்கு மாகாண அபிவிருத்தி சம்பந்தமான விபரங்களை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ளோம். இலங்கையில் வடக்கு மாகாணமானது யுத்தத்தின் காரணமாக மற்றைய மாகாணங்களை விட அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. எனவே வடக்கு மாகாணம் மற்றைய மாகாணங்களைப் போல் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதே எமது பிரதானமான கோரிக்கையாக இருக்கின்றது.

சிறுபான்மை கட்சிகளை சேர்ந்தவர்கள் கோட்டபாய ராஜபக்சவை ஒரு இனவாதி என முத்திரை குத்துவதற்காக விசமத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐக்கியதேசிய கட்சியின் பிரதான ஜனாதிபதி வேட்பாளருக்கு எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடாமல் சிறுபான்மை கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காலிமுகத்திடலில் நடைபெற்ற ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி பிரச்சாரக் கூட்டத்தில் சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த எவருக்கும் உரையாற்றுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.

கோட்டபாய ராஜபக்கசவுக்கு எதிராக சில அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களில் சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் தேசிய பொருளாதாரத்தை முன்கொண்டு செல்வதற்காக கோட்டபாய ராஜபக்சவின் வெற்றிக்கு உழைக்க முன்வந்துள்ளோம். சிறிலங்கா சுதந்திரக்கட்சியானது பொதுஜனபெரமுன கட்சியுடன் கலந்துவிடும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் தாய்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன ஒன்றுசேர வாய்ப்புள்ளது.

சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என கோட்டாபாய ராஜபக்ச எவ்விடத்திலும் தெரிவிக்கவில்லை. சில ஊடகங்கள் அவற்றை திரிவுபடுத்த முயற்சிக்கின்றது என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்