சஹ்ரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் சாதாரண இளையோர்களை பிடிக்கலாம் என்றால் அமைச்சர் ஹக்கீமை விட்டு வைத்திருப்பது ஏன்?

பயங்கரவாதி சஹ்ரானுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு நியாயமான ஆதாரம் உள்ளது, ஆனால் சாதாரண முஸ்லிம் இளையோர்களை கைது செய்ய முடிந்த பொலிஸ், பாதுகாப்பு தரப்பு இவ்விடயத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இயற்கையான நீதிக்கு புறம்பான, ஒரு தலை பட்சமான நிலைப்பாடு ஆகும் என்று 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும், முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவருமான முஹமட் மிப்லால் மௌலவி தெரிவித்தார்.

இது தொடர்பாக இவர் நேற்று வியாழக்கிழமை விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-

பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பல நூற்றுக்கணக்கான சாதாரண முஸ்லிம் இளையோர்கள் பொலிஸ், பாதுகாப்பு தரப்பு ஆகியவற்றால் பிடிக்கப்பட்டார்கள். சஹ்ரானுடன் புகைப்படங்கள் எடுத்து இருந்தனர், சஹ்ரான் நடத்திய மார்க்க வகுப்புகளுக்கு சென்று இருந்தனர், சஹ்ரானின் போதனைகளை செவிமடுக்க சென்றனர் போன்ற காரணங்களுக்காக இவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு எதிராக எவராலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்காத போதிலும் பொலிஸ், பாதுகாப்பு தரப்பு தேடி தேடி இவர்களை கைது செய்தது என்பது எமது அவதானம் ஆகும்.

இவர்களுக்கான நீதியை பெற்று கொடுப்பதிலும், இவர்களை விடுவித்து மீட்டெடுப்பதிலும் முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் இதய சுத்தியாக செயற்பட்டு வருகின்றது. ஆயினும் குறுகிய சுய இலாப அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம் அரசியல் தலைமைகள் எவையும் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படாமல் நழுவி கொண்டன என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்து கொள்கின்றோம். கணிசமான முஸ்லிம் இளையோர்கள் இன்னமும் விடுதலை செய்யப்படாமல் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸ், பாதுகாப்பு தரப்பு முறையான, சரியான புலன் விசாரணைகளை செய்தது என்று சொல்லப்பட்டு நம்ப வைக்கப்பட்டது. ஆயினும் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சமூக இணைப்பு தளங்களில் திடீரென்று வெளியிடப்பட்டு அதீத பிரசித்திகளை பெற்று வருகின்ற காணொளி ஒன்று இம்மாயையை தகர்த்து உடைத்து உள்ளது. இத்தாக்குதல்கள் தொடர்பான புலன் விசாரணைகளில் ஓட்டைகள் இன்னமும் இருக்கின்றன என்பதையும் இது எடுத்து காட்டுகின்றது. மு. கா தலைவர் ரவூப் ஹக்கீம் சஹ்ரானுடன் சம பந்தியில் அமர்ந்து பேரம் பேசி இருப்பதை இக்காணொளியில் கண்டும், கேட்டும் உணர முடிகின்றது.

சஹ்ரானை சந்தித்து பேசியதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதை அடுத்து பொது தளங்களில் ஒப்பு கொண்டு உள்ளார். இவரின் ஒப்புதலின்படி 2015 ஆம் ஆண்டு இச்சந்திப்பு இடம்பெற்று இருக்கின்றது. அவர் சென்ற இடத்திலே சஹ்ரான் அங்கு இருந்தார் என்பதாக சொல்லி உள்ள ரவூப் ஹக்கீம் அவருக்கு சஹ்ரான் ஒரு பயங்கரவாதி என்று அப்போது தெரிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.  அவர் பொய் சொல்லவில்லை என்றே வைத்து கொள்வோம். ஆனால் சஹ்ரானுடன் புகைப்படம் எடுத்த, சஹ்ரான் நடத்திய மார்க்க வகுப்புகளில் பங்கேற்ற, சஹ்ரானின் போதனைகளை செவிமடுக்க சென்ற யாருமே அவர் ஒரு பயங்கரவாதி என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை என்பது தெட்டத்தெளிவான உண்மை ஆகும்.

இந்நாட்டின் உண்மையான தேச பற்றாளர்கள் என்கிற வகையிலும், சட்டத்துக்கு முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்கிற அடிப்படை உரிமை பாரபட்சம் இன்றி அனைவருக்கும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகின்றவர்கள் என்கிற அடிப்படையிலும் நாம் கடந்த  18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸ் தலைமையகத்துக்கு நேரில் சென்று காணொளி ஆதாரத்தை  சமர்ப்பித்து அமைச்சர் ரவூப் ஹக்கீமை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று முறைப்பாடு மேற்கொண்டோம். அவர்கள் எமது முறைப்பாட்டை ஏற்று கொண்டார்கள். ஆனால் சாதாரண பல நூற்று கணக்கான முஸ்லிம் இளையோர்களை வலிந்து இலக்கு வைத்து கைது செய்த பொலிஸ், பாதுகாப்பு தரப்பு  இது வரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது  எந்த  நடவடிக்கையுமே எடுக்காமல் இருப்பது இயற்கையான நீதிக்கு புறம்பான ஒருதலை பட்சமான நிலைப்பாடு ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்