எம் மக்களுக்கு பெற்றுத்தருவதாக கூறிய 15000 ரூபாவை உடனடியாக வழங்க வேண்டும் – என் கட்டளையை மீறும் பட்சத்தில் நல்ல ஒரு பாடம் புகட்டுவேன்

மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு அமரர்.ரணசிங்க பிரேமதாச வாக்குரிமை வழங்கியமை கைமாறுக்காகவே தவிர உரிமையை தங்க தட்டில் வைத்து வழங்கவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் எனது மக்களுக்கு வாக்குரிமையை வழங்குங்கள் அவர்களை உங்களுக்கு வாக்களிக்க சொல்கின்றேன் என்று சொன்னதாலையே பிரேமதாச நமக்கு வாக்குரிமையை வழங்கினார்.

அந்தவகையில் தங்க தட்டில் வைத்து உரிமையை வழங்கவில்லை. கைமாறுக்காவே வாக்குரிமை வழங்கப்பட்டது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான பிரச்சார கூட்டம் 23.10.2019 அன்று மாலை பூண்டுலோயா நகர மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015ம் ஆண்டில் மாற்றம் ஒன்று தேவை என நீங்கள் வாக்களித்தீர்கள். ஆனால் உங்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மாத்திரமே. 2015ம் ஆண்டு காலத்தில் காணப்பட்ட தேயிலை மலைகள் இன்று பாதிக்கு பாதி காடாகி விட்டது.

தோட்ட நிர்வாகங்கள் முறையாக தேயிலை தோட்டங்களை பராமரிக்க தவறியதால் யாலை காடுகள் போல சிறுத்தைகளும் குளவிகளும் சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் சிறுத்தை பயத்துக்கும் குளவிகள் தாக்குதலுக்கும் இழக்காகிய தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்த ள்ளனர்.

என சுட்டிக்காட்டிய அவர் மேலும் தெரிவித்தததாவது

பெருந்தோட்டங்களில் இன்று வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த வீட்டு திட்டங்களுக்கு முன் நாம் கிராமங்களை உருவாக்க வேண்டும் என எமது என்னப்பாடு இருந்தது.

ஆனால் இன்று கிராமங்கள் என்ற வார்த்தை அமைச்சில் மாத்திரமே இருக்கின்றது தவிர தோட்டங்களில் கிராமங்கள் இல்லை. அதே நேரத்தில் தோட்டங்களில் வீடமைப்பு திட்டத்தில் வீடுகளை வழங்கும் முறைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசினரிடமிருந்து 10 பேரை அழைத்து வந்தால் உனக்கு 10 வீடு தலைவர்கள், உறுப்பினர்கள் என்று அழைத்து வந்தால் அவர்களுக்கு வீடு என்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நான்கரை வருடங்களில் சம்பள பிரச்சினை என்பது இழுபறி நிலையிலேயே உள்ளது.

நிலுவை கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. கடந்த சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் பின் 50 ரூபாவை மேலதிகமாக பெற்றுத்தருவதாக தெரிவித்தார்கள். இதற்காக மூன்று முறை அமைச்சரவையை நாடியும் இருந்தார்கள்.

ஆனால் இன்று வரை அது கிடைக்கவில்லை. அது அவ்வாறிருக்க கடந்த வாரம் தீபாவளி முற்பணமாக 15000 ரூபாய் தருவதாக தெரிவித்தார்கள். எமது மக்களுக்கு 15000 ரூபாய் கிடைப்பது என்றால் நான் வரவேற்கின்றேன் என்று நானும் தெரிவித்திருந்தேன்.

ஆனால் மறு நாள் காலையில் தேர்தல் ஆணையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஆறுமுகன் தொண்டமானும் மொட்டை கடிதங்களை வழங்கி தோட்ட தொழிலாளர்களுக்கு 10000 ரூபாவை மாத்திரம் வழங்கும்படி தெரிவித்து விட்டார்கள். இது அவர்களின் கையாளாகாத ஒரு தனம் என்றே நான் சொல்லுவேன். தேர்தல் ஆணையகம் அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை எனவும், நீங்கள் குறித்த தொகையை வழங்க முடியும் என்றும் எமக்கு கடிதங்கள் மூலம் தெரிவித்திருக்கின்றது. அந்த கடிதம் என்னிடம் இருக்கின்றது.

இன்று நான் ஒரு கட்டளை இடுகின்றேன். எம் மக்களுக்கு பெற்றுத்தருவதாக கூறிய 15000 ரூபாவை உடனடியாக வழங்க வேண்டும். என் கட்டளையை மீறும் பட்சத்தில் எதிர்வரும் 17ம் திகதி நான் பாடம் புகட்டுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்