வெற்றியை உறுதி செய்யுங்கள் – மக்கள் பயன்பெறக்கூடிய நாட்டை பலப்படுத்துவேன்

இலங்கை தேயிலைக்கு வெளிநாடுகளில் நியாயமான விலை உயர்வினை பெற்றுக்கொடுக்க எனது ஆட்சியில் நடவடிக்கை எடுப்பேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான பிரச்சார கூட்டம் 23.10.2019 அன்று மாலை பூண்டுலோயா நகர மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் அரச திணைக்களங்களில் சேவைகளை மக்கள் பயன்பெற கூடிய வகையில் அபிவிருத்தி செய்வதாகவும், அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவைகளை செய்யும் பொழுது எந்தவோர் அரசியல் தலையீடும் இன்றி சுயமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரச திணைக்களங்களின் செயற்பாடுகளை எனது ஆட்சியில் வலுப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் விவசாயத்துறையை ஊக்குவிப்பதில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அதனை செயல்படுத்தி வந்தார்.

நெல் விவசாயம் மற்றும் தேயிலை உள்ளிட்ட பல விவசாய அபிவிருத்திகளை ஊக்கப்படுத்துவதில் அவரின் செயற்திட்டங்கள் அமைந்திருந்தது. அந்தவகையில் இராசாயண உரங்களுக்கு விலை மானியம் வழங்கப்பட்டது.

ஆனால் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் முறையான நிர்வாக நடவடிக்கைகளை கொண்டு செல்ல தவறியதால் மக்களுக்கு சேவை செய்யும் அரச அதிகாரிகள் முறையாக செயல்பட தவறியதால் நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயமும் சீரழிவுக்கு உள்ளாகியது.

ஆனால் எனது ஆட்சியில் திறமைமிக்க அரச அதிகாரிகளை நல்ல நிர்வாகிகளாக செயல்படுத்தி மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை முன்னெடுப்பேன்.

நாட்டில் அபிவிருத்திகான மாற்றம் ஒன்றை எனது ஆட்சியில் உருவாக்குவேன். நல்ல நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவேன். என் மீது நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்த அவர், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வும் அதற்கு அப்பால் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க கூடிய அபிவிருத்தி பணிகளையும் செய்து தாருங்கள் என ஆறுமுகன் தொண்டமான் என்னிடம் வலியுறுத்தினார்.

ஆனால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதுடன், அதற்கு அப்பால் இம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என அவரிடம் உறுதியளித்துள்ளேன்.

தோட்ட தொழிலை மாத்திரம் நம்பி விடாது அதற்கு அப்பால் சென்று தொழில்களில் ஈடுப்படுவதற்கு கல்வி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்காக நான் தொண்டமானிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனது வெற்றியை உறுதி செய்யுங்கள் என்மீது நம்பிக்கை வையுங்கள் என கேட்டக்கொண்ட அவர் நாட்டில் புது யுகம் ஒன்றை மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்குவேன் எனவும், நாங்கள் யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் அல்லர் எனவும் தாங்கள் யுத்தத்தை முடித்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்