ஹக்கீம் என்பவர் பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொண்ட சிறுபான்மை தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு

ஹக்கீம் என்பவர் பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொண்ட சிறுபான்மை தலைவர் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கொழும்பில் இன்று வியாழக்கிழமை(24)  காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயவின் ஊடக சந்திப்பு மற்றும் அவரின் பொதுக்கூட்டங்களின் உரை ஆகியவற்றை அடுத்து பெரும்பான்மை மத்தியில் அவருக்கு ஆதரவு வெகுவாக குறைந்து வருகின்றது.அதுவும் சிந்திக்கக்கூடிய பெருபான்மை மக்கள் பலர் அவர்களின் வாக்கை கோட்டபாயவுக்கு எதிராக பிரயோகிக்க முடிவெடுத்துள்ளமை அண்மையை ஆய்வுகள் மற்றும் புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதை அறிந்த ராஜபக்சவினர் பெரும்பான்மையினரிடம் தமக்கு குறைந்துவரும் செல்வாக்கை அதிகரிக்க தமது முகவர் மிப்ளால் மௌலவி மூலம்  அமைச்சர் ஹக்கீமுக்கு சஹ்ரானுடன் தொடர்பு உள்ளது என்று தமக்கு நெருக்கமான இரண்டு ஊடகங்கள் மூலம் தமது வழமையான இனவாத பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.

அமைச்சர் ஹக்கீம் என்பவர் பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொண்ட சிறுபான்மை தலைவர்.எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் தனிப்பட்ட ரீதியில் நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர். ரத்ன தேரரின் உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்படவிருந்த அசாதாரண சூழ்நிலையை தடுப்பதில் பெரும் பங்காற்றியவர்தான் இவர்.இவரை தீவிரவாதிகளுடன் இணைத்து செய்யப்படும் பிரச்சாரத்தை பெரும்பான்மை சகோதரர்கள் கூட நம்பமாட்டார்கள்

இந்த மிப்ளால் மௌலவி என்பவர் யார்? இவர் ராஜபக்ச சகோதர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் ராஜபக்சக்களின் அரசியல் முகவர். இவரின் கடந்தகால செயற்பாடுகளை அவதானித்தால் இதை நன்கு உணரலாம். 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த அரசை விமர்சித்து வந்த ஒருவர். ஆனால் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது இடம்பெற்ற முஸ்லிம் விரோத செயல்களின் போது இவர்களை காண கிடைக்கவில்லை. இவ்வளவு நாளும் இல்லாமல் தேர்தல் நெருங்கும் இன்று மட்டும் இந்த வீடியோ தொடர்பாக இவர் முறைப்பாடு செய்யும்போதே இவர் ராஜபக்சக்களின் கைக்கூலி என்பது தெளிவாக தெரியும்.

அந்த வீடியோ தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் பூரண விளக்கமளித்துள்ளார். ஆகவே இவர்களின் சூழ்ச்சியில் பெரும்பான்மை சமூகம் ஏமாறாது எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியில் பூரண பங்களிப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்