கோத்தாபாய ராஜபக்ஸவுக்கு வாக்களிக்குமாறு கிழக்கு தேசிய விடுதலை முன்னணி அறிவித்துள்ளது

கிழக்கு வாழ் மக்களின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு கோத்தாபாய ராஜபக்ஸவுக்கு வாக்களிக்குமாறு கிழக்கு தேசிய விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கிழக்கு தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் புவிலக்ஸன் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் தமிழர் வரலாற்றுக் காலம் தொட்டு தமிழ் மக்களை எமாற்றி வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 13 அம்ச கோரிக்கைகள் வெறுமனே மக்களை திசை திருப்பும் செயற்பாடு எனவும் அவைகள் எந்த அரசாங்கத்திலும் நிறைவேற்றப்படாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன்னமும் சிறையில் உள்ள 200 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத கூட்டமைப்பு அரசியல் தீர்வை எவ்வாறு பெற்றுக்கொள்ளப் போகின்றார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தமது சுய இலாபத்திற்காக அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறி மக்களை ஏமாற்றி ஐக்கிய தேசிய முன்னணியும் ஒரு போதும் தமிழ் மக்களுக்கான தீர்வை தரப்போவதில்லை என்பதுடன் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளையும் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டு கோத்தாபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்