வீணை, சைக்கிள், கை இணைந்து வலி.வடக்கு அமர்வில் குழப்பம்!

பொருட்படுத்தாது அமர்வை நடத்தினார் தவிசாளர்

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள பிரதேசசபையின் தலைமைக் காரியாலய சபா மண்டபத்தில் நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய அமர்வில் தலைமையுரையைத் தொடர்ந்து சென்றகூட்ட அறிக்கை அங்கீகரித்தல் இடம்பெறுகின்ற நேரத்தில் ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி — கோட்டாவுக்கு நேரடியாக ஆதரவு வழங்குகின்ற இரு கட்சிகளும் மறைமுகமாக ஆதரவு வழங்குகின்ற ஒரு கட்சியும்  ஆகியன கூட்டிணைந்து சபையைக் குழப்பி, சபா மண்டபத்துக்கு நடுவில் வந்துநின்று, மேசையில் ஏறி அமர்ந்து, சீக்கா அடித்து, கத்திக் கூச்சலிட்டு காட்டுமிராண்டித்தன செயற்பாட்டில் ஈடுபட்டனர்.ஆயினும், 39 உறுப்பினர்கள் கொண்ட சபையில் ஓர் உறுப்பினர் நாட்டில் இல்லை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஜெயரட்ணம் என்ற உறுப்பினர் வரவை உறுதிப்படுத்தியும் கூட்டத்துக்கு சமுகமளிக்காமையால் 20 பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டம் நடைபெற்று பகல் 11.30 மணிக்கு நிறைவு பெற்றது என தவிசாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தவிசாளர் சோ.சுகிர்தன் மேலும் தெரிவித்தவை வருமாறு –

வலி.வடக்கு பிரதேசசபையில் சிறப்பான அபிவிருத்தி நடைபெறுகின்றது. இதனைப் பொறுக்கமுடியாத ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து வேண்டுமென்றே என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இந்தக் குழப்ப முயற்சி 3 நாள்களுக்கு முன்பேதிட்ட மிடப் பட்டதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

சென்ற கூட்டங்களில் நிறை வேற்றப்பட்ட இரு தீர்மானங்கள் குறித்து மேற்படி குழப்பம் விளைவித்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். முதலாவது தீர்மானம் தையிட்டி ஆவளை மயானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம் அகற்றுவது தொடர்பானது. அது சம்பந்தமாக நாங்கள் குறித்த நிறுவனத்திற்குக் கடிதம் எழுதி யதன் அடிப்படையில் அதனை அகற்றுவதற்கு அவர்கள் இணங்கியிருக்கின்றனர்.

அடுத்தது – சுகாதார நில நிரவுகை திட்டம் தொடர்பானது. அது முன்னரே திட்டமிட்ட விடயம். அது தொடர்பாகவும் நாங்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குக் கடிதம் எழுதியதன் அடிப்படையில் தேர்தல் காலம் என்பதால் தேர்தலின் பின்னர் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

இதனை நாங்கள் சபைக்கு கூறிய நிலையில் ஈ.பி.டி.பி உறுப் பினர்கள் 8 பேர், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 4 பேர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப் பினர்கள் 5 பேர், தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சஜீவன் ஆகியோர் இணைந்து குழப்பங்களை ஏற்படுத்தினர்.

குழப்பம் விளைவித்த உறுப்பினர்களை எனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் கூட்ட மண்டபத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டேன். ஆனால், அவர்கள் கூட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு முரணாக தொடர்ந்தும் செயற்பட்டனர். இதனால் பொலீஸாரை அழைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆயினும், அவர்கள் வருவதற்குள் பெரும்பான்மை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

வெளியே நின்ற பொலிஸா ருடன் பேசிய போது ஈ.பி.டி.பி உறுப்பினர் மாதவன் என்னை பொலிஸாருடன் இணைத்து நாம் உரையாடுவனவற்றை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நிலையில் நான் அவரது தொலைபேசியைபெற்றேன்..அது தவறுதலாகக் கீழே விழுந்தது. கீழே விழுந்த தொலைபேசியை பொலிஸார் எடுத்தனர்.

இவ்வாறிருக்க நான் தாக் கினேன் எனவும் தனக்குக் காயங்கள் உள்ளன எனவும் பொய்யான கருத்துக்கள் சிலரால் கூறப்படுகின்றன. இதேபோல் சபைக்கு வெளியே நின்றிருந்த பொலிஸார் துப்பாக்கியைப் பாதுகாப்பதற்காக அதனை அவர்களது கையில் எடுத்து வைத்திருந்தமையை, அதைக் காட்டி அவர்கள் அச்சுறுத்தினர் எனக் கூறி பொலிஸார் மீதும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளனர். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்