ஸ்ரீலங்கா அரசியல் நாட்டு மக்கள் மத்தியில் இவ்வாறே தற்போது காணப்படுகின்றது!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற 225 உறுப்பினர்களில் ஒருவரையும் நாட்டு மக்கள் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசியல் தற்போது நாட்டு மக்களுக்கு அறுவருப்பாகிவிட்டதாகவும் அவர் ஏற்றுக் கொண்டார். கொழும்பில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடு இன்று செல்கின்ற பயணத்தைப் பார்க்கும் போது பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது, நல்லிணக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த நான்கரை வருடங்களிற்குள் இப்படியான அழிவு ஏற்பட்டுள்ளது. விசேடமாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னர் இனங்களுக்கு இடையிலான ஐக்கியமும், அதேபோல நாட்டின் தேசியப் பாதுகாப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே பொறுப்புணர்வுடன் இந்த அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல கோட்டாபய ராஜபக்ச என்பவர் அரசியல்வாதியல்ல. இன்று அரசியலை நாட்டு மக்கள் அருவருப்பாகப் பார்க்கின்றனர். பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களையும் வீட்டிற்கு அனுப்பியாக வேண்டும் என்று மக்கள் தெரிவிப்பதை நாம் கண்டிருக்கின்றோம்.

ஆகவே 225 உறுப்பினர்களில் ஒரு தலைவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் போரை வெற்றி கொண்ட அரசியலில் சம்பந்தப்படாத கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்றே கூறுகின்றேன்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்