அபிவிருத்திகளுக்கு அஞ்சியே சபையைக் குழப்ப முயன்றனர்! வலி.வடக்கு உறுப்பினர் ஹரிகரன்

வலி.வடக்கு பிரதேசசபையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சியை அதிகப்பெரும்பான்மை ஆசனங்களுடன் நாம் கைப்பற்றி மேற்கொண்ட அபிவிருத்தியின் தொடர்ச்சியாக இந்த சபைக்காலத்திலும் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தோம். எமது அபிவிருத்திகளுக்கு அஞ்சியே அரசியல் காழ்ப்புணர்வால் சில உறுப்பினர்கள் சபை அமர்வைக் குழப்பினர்.

– இவ்வாறு தெரிவித்தார் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் சி.ஹரிகரன்.

வலி.வடக்கு பிரதேசசபையில் நேற்று குழப்பநிலை ஏற்பட்டது. நிலைமை முடிவுக்கு வந்தபின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

2011 ஆண்டுத் தேர்தலிலும் நான் வெற்றிபெற்றேன். இரண்டாவது தடவையாக 2018 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றிபெற்றேன். தவிசாளரும் இரு தடவைகளும் வெற்றிபெற்றார். 2011 ஆம் ஆண்டுத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று காங்கேசன்துறை தொகுதியில் முதலிடத்தில் வந்தமையால் சுகிர்தன் தவிசாளர் ஆனார். அந்தக் காலத்தில் பிரதேசத்தை சிறப்பான அபிவிருத்திப் பாதையில் கொண்டுசென்றமையால் 38 உறுப்பினர்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைத்து உறுப்பினர்களும் இணைந்து சுகிர்தனை இம்முறை இரண்டாவது தடவையாகவும் தவிசாளர் ஆக்கினார்கள்.

2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியின் நீட்சியாகவே 2018 ஆம் ஆண்டு நாம் சபையைக் கைப்பற்றிய பின்னரான அபிவிருத்திகளும் அமைந்துள்ளன. தற்போதும் எமது கட்சியில் பழைய அனுபவம்மிக்க உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள்.

வலி.வடக்கு பிரதேசசபை எல்லைக்குள் 21 வட்டாரங்கள் உள்ளன. அதில் 17 வட்டாரங்களை நாம் வென்றுள்ளோம். நாம் வென்ற வட்டாரத்துக்கு என்றில்லாது பிரதேசத்தின் சகல வட்டாரத்துக்கும் பாகுபாடின்றி ஒரே அளவான அபிவிருத்தியை மேற்கொள்கின்றோம்.

இம்முறை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஊடாக கம்பெரலியா, ரண் மாவத்த, விசேட நிதி எனப் பல நிதிகள் அபிவிருத்திக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை அனைத்தும் சமனாக 21 வட்டாரத்துக்கும் பங்கிட்டே அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. 2019 ஆம் ஆண்டுக்குரிய பாதீட்டுக்கு எமது தமிழரசுக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்களும் தமிழர் விருதலைக் கூட்டணியின் இரு உறுப்பினர்களும் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். ஏனையவர்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஆனால், நாம் வரவு – செலவுத் திட்டத்தில் அவர்களால் வழங்கப்பட்ட முன்மொழிவுகளையும் உள்ளடக்கி, அவர்கள் குறிப்பிடுகின்ற அபிவிருத்திகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

எமது இவ்வாறான அபிவிருத்திகளைப் பொறுக்கமுடியாதவர்களே – ஜீரணிக்க முடியாதவர்களே – அரசியல் காழ்ப்புணர்வால் குழப்பத்தில் ஈடுபட்டனர். கடந்த சில அமர்வுகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஜெயபாலசிங்கம் (அன்பு) இவ்வாறான குழப்ப முயற்சிகளில் ஈடுபட்டார். ஒருதடவை எமது கட்சி உறுப்பினர் ஐ.மயூரனை தாக்க முற்பட்டார். அடுத்த அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஸ்ரீ தாமோதரராஜாவை தாக்கினார். கடந்த கூட்டத்தில் கூட்ட அறிக்கையைக் கிழித்தெறிந்தார். இவை அனைத்தின் போதும் தவிசாளர் மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட்டார். இவ்வாறான சம்பவங்களை அறிந்து ஊடகங்கள் தவிசாளரைத் தொடர்புகொண்டு கேட்டமைக்கு அவ்வாறு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றே தெரிவித்தார். நாம் எதற்காக உண்மையை மறைத்தீர்கள் என்றமைக்கு, நாம் ஒரு குடும்பம். இவ்வாறான சின்னவிடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்து ஆரோக்கியமான சபைக்குக் களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்றார்.

இன்று (நேற்று) வேறுவழியின்றியே பொலீஸாரை அழைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவர்களின் இந்த நாகரிகமற்ற – சபை ஒழுங்கு நடவடிக்கைக்கு முரணான – கீழ்த்தரமான – செயற்பாடு வருத்தமளிக்கின்றது. ஆனாலும், எமது மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்