துடிப்பான தலைவரா, 70 வயதான முதியவரா ஜனாதிபதியாக வேண்டும்

சஜித் பிரேமதாச போன்ற 24 மணிநேரமும் வேகமாகப் பணிபுரியும் தலைவரைத் தெரிவு செய்வதா அல்லது வயதான நோயாளியான 70 வயதான முதியவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதா என மக்களிடம் வினவுவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கூறினார். அவர் இதனை 21ம் திகதி அரலகங்வில மகத மணவில் இடம்பெற்ற ஐ. தே. க. பிரதித் தலைவர் சஜித் பரமதாசவுக்கு ஆதரவு வழங்கும் கூட்டத்திலேயே தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

இந்தியாவின் புலனாய்வுப் பிரிவினர் தற்போது 70 வயதான ஜனாதிபதியல்ல இளைஞரான சக்திமிக்க உழல் மோசடி வழக்குகள் இல்லாத சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாவார் என ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது. கொலன்னாவையிலுள்ள மக்கள் ஒரு போதும் எனது தந்தையை சேர் என்று கூறி அழைத்ததில்லை. லக்கி அண்ணா, லக்கி மகன் என்றே அழைத்தார்கள். தற்போதுள்ள மொட்டுக் கட்சியின் பிரமுகர்கள் கொலன்னாவையில் அரசியலுக்கு போதைக் கடத்தல்காரர்களை நியமித்ததால் கொலன்னாவையில் போதைப்பொருள் விநியோகிக்கும் 30 இடங்கள் இருந்தன. இளைஞர்களை மீட்பதற்காக அதனை நிறுத்தக் கோரினோம்.

அந்த அரசியல் தலைவரும் மற்றும் பிரபல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் எனது தந்தைக்கு வாய் அதிகம் என்று கூறியதனால் கொலன்னாவை இளைஞர்களை போதையிலிருந்து மீட்கச் சென்ற எனது தந்தையை பட்டப்பகலில் சுட்டுக்கொன்றார்கள். அதேபோல் ஊடகவியலாளர் எக்னலிகொடவை காணாமல் செய்ததினால் அவரின் மனைவி செருப்புகள் தேயும் வரை தனது கணவனை தேடி அலைகின்றார். கடந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் இன்று நல்லவர்களாகக் கூறிக்கொண்டாலும் ஈ, நுளம்புகளைக் கொல்வதைப் போல் மனிதர்களை கொலை செய்த காலமொன்று இருந்ததென்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மொட்டுக்கட்சிக்குச் சென்றால் மொட்டுக் கட்சித் தலைவர்கள் ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோருக்கு சரியான இடமளிக்கமாட்டார்கள். அமைப்பாளர் பதவியும் கொடுக்க மாட்டார்கள். அவர்களால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வர முடியாது. அரசியல் அனாதைகளாக மாறியுள்ளார்கள். சஜித் பிரேமதாச இதயபூர்வமாக மக்களிடம் பேசும் போது அதற்கு சேறு பூசுகின்றார்கள். சஜித் பிரேமதாசவுககு ஊழல் மோசடி வழக்குகள் இல்லை. கோடிக்கணக்கான மிக் ஊழல் இல்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் இல்லை. மக்களின் வரிப்பணம் மூலம் மறைந்த தந்தைக்கு கல்லறை கட்டவில்லை. மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷக்கள் மக்களின் வரிப்பணத்தில் தமது தந்தைக்கு கல்லறை கட்டியுள்ளார்கள்.

விஜேதாச வெட்கம் இல்லாமல் மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்குகளை அளிக்கச் சொல்கின்றார். மக்களை ஏமாற்றும் இவ்வாறானவர்களுக்கு அரசியல் செய்ய இடமளிக்கக் கூடாது. ஊழல் மோசடியற்ற நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய வறியவர்களைப் பற்றி சிந்திக்கும் ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதாஎன மக்களே தீர்மானிக்க வேண்டும். அக்காலம் நெருங்கியுள்ளது. பெண்களை தாய்மார்களை கேலி செய்யும் 70 வயதானவரை இந்நாட்டின் ஜனாதிபதியாக்குவதா? இந்நாடு ராஜபக்ஷ குடும்பத்துக்குச் சென்றால் 10 ராஜபக்ஷக்களே இந்நாட்டை ஆள்வார்கள். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் ஏழை மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதை நிச்சயமாகக் கூறலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்க கட்சியை எனது தந்தை உள்ளிட்ட இந்நாட்டு மக்கள் உயிரைப் போல் பாதுகாத்ததால் நான் அரசியல் பயணத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே ஆரம்பித்தேன். 68 வருடங்கள் பழைமை வாய்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை குழிதோன்றிப் புதைத்து விட்டு மொட்டுக் கட்சியின் ஒருவரை ஜனாதிபதியாக்க முயல்கிறார்கள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்