இலங்கைக்கு ஜெரமி கோர்பின் எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லையெனில் தாம் அமைக்கப்போகும் அரசாங்கத்தில் இலங்கையுடனான இராணுவ பொருளாதார உடன்படிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட படுகொலையானது ஓர் “இன அழிப்பு” தான் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி விசேட மாநாடு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

பிரித்தானிய தமிழருக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு நேற்று (வியாழக்கிழமை) பிரித்தானிய வெஸ்ட்மின்ஸ்ரர் பாராளுமன்ற கட்டிடத்தின் அறை இலக்கம் 14 இல் மாநாடு இடம்பெற்றது.

இம்மாநாட்டின் வாயிலாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இறுதி கட்ட போரில் நடைபெற்ற கோரத்தினை “இன அழிப்பு” என்று பிரகடனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜெரமி கோர்பின், “ஒருவருக்கு என்ன ஆனது என்று தெரியாத வலி ஒருபோதும் நீங்காத ஒரு வலியாகவே இருக்கும்.

அமைதி, நீதி, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் ஒரு அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறேன்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் நாம் அமைக்கப்போகும் அரசில் இலங்கையுடனான இராணுவ பொருளாதார உடன்படிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்