பிரதான வீதியாக மாறப்போகும் புகையிரத ஒழுங்கை

மட்டக்களப்பு மாநகரின் நிலையான அபிவிருத்தியினைக் கருத்தில் கொண்டு மாநகர முதல்வரின் 1000 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நகரின் மத்தியில் நிலவும் சனநெரிசலை கட்டுப்படுத்தவும், கால விரயத்தினைக் குறைக்கும் நோக்கோடும் 3 கிலோ மீற்றர் நீளமும் 11 மீற்றர் அகலமும் கொண்ட ஓர் மாற்றுப் பாதையொன்றினை அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள மேற்படி வீதி அபிவிருத்திப் பணிகளில் முதற்கட்டமாக போக்குவரத்துக்கு இடைஞ்சலான முறையில் மிகக் குறுகிய ஒழுங்கையாக காணப்பட்ட புகையிரத ஒழுங்கையானது விஸ்தரிக்கப்படவுள்ளது.

இதற்காக அப்பாதையில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வாசஸ்தலம் ஒன்று முற்றாக உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த வாசஸ்தலமானது இன்று (25.10.2019) மட்டக்களப்பு மாநகர முதல்வரின் முன்னிலையில் உடைக்கப்பட்டது. இதன் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர பொறியியலார் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

2009 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து இலகினைக் கருத்தில் கொண்டு இவ் ஒழுங்கையானது திறந்து விடப்பட்ட போதும் தற்காலத்தில் பெரும்பாலான மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளமையால் போக்குவரத்து நெருசல் ஏற்படுவதோடு குற்றச் செயல்களும் இடம்பெற்றுவரும் இடமாகவும் குறிப்பாக தனியாக வரும் பெண் பிள்ளைகள் தீண்டல்களுக்கும் உள்ளாகி வருவது தொடர்பிலும் பொதுமக்களால் மாநகர முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் சுட்டிக் காட்டப்பட்டு வந்த நிலையில் நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான மாற்றுப் பாதையாக இதனை உருவாக்கும் திட்ட மொன்மொழிவும் முதல்வரால் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவ் ஒழுங்கையினை விஸ்தரிப்பு செய்வதற்காக போக்கு வரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜீண ரணதுங்கவின் வழிகாட்டலில் புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் மற்றும் பிராந்திய பொறியியலாளர்கள் மற்றும் மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஆகியோரின் அனுமதியுடன் குறித்த ஒழுங்கையினை விரிவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கான 3 மில்லியன் ரூபாய் நிதியினை கம்பெரலிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஒதுக்கியிருந்ததோடு மிகுதி வேலைகளை மாநகர சபையின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்