அரசியல் பௌத்தம் ஜனதிபதி தேர்தல் மற்றும் சிறுபான்மையினர்

அமீர் அலி

இலங்கையில் அரசியல் பவுத்தத்தின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டுக்குச் சென்றாலும் 1950 களில் இது தேர்தல் வெற்றிக்கான  கருவியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்  நிறுவனர் SWRD பண்டாரநாயக்க அவர்களால் பயன்படுத்தப்பட்டது. அவரிடமிருந்து தான், தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க சக்தியை நிலைநிறுத்த சிஐஏ கூட பவுத்த மதத்தை அரசியல் மயமாக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. (Eugene Ford, Cold War Monks, Yale University Press, 2017).1950 களில் இருந்து, அரசியல் பவுத்தம் இலங்கையின் இன – ஜனநாயகத்தில் ஒரு நிரந்தர அம்சமாக மாறியுள்ளது. ஒரு வகையில் பார்த்தால், அரசியல் பவுத்தம் 2005 மற்றும் 2009 க்கு இடையில் ஒரு ஆயுதமேந்திய தேசியவாத தமிழ்ப் போராளிகளை எதிர்கொண்டபோது ஒரு இராணுவ முகத்தை ஏற்றுக்கொண்டது, அந்த மோதலின் முழுமையான வெற்றி அரசியல் மயமாக்கப்பட்ட பவுத்தர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்தது.Image result for gnanasara thero released


2009 ல் உள்நாட்டுப் போரில் கிடைத்த வெற்றி அரசியல் பவுத்த மதத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்ததில் ஆச்சரியமில்லை. அந்த வெற்றியின் விளைவாக சிங்கள மனநிலையில் ஒரு  பாரிய  மாற்றம் உண்டாயிற்று.  ஒருபுறம், அந்த வெற்றி இடைக்காலத்திலிருந்தே சிங்களவர்களை ஆட்டிப்படைத்து வந்த அச்சுறுத்தலை கிட்டத்தட்ட உடனடியாக அழித்துவிட்டது. அண்டைய துணைக் கண்டத்திலிருந்து தமிழர்களால் தங்கள் நாடு ஒரு நாள் படையெடுக்கப்படும் என்ற பயம் போய்விட்டது.  மறுபுறம், அந்த வெற்றி தானாகவே சிறிலங்கா  மீது எப்போதும் சிங்கள பவுத்த மேலாதிக்கத்தை அடைவதற்கான அசைக்க முடியாத இலட்சியமாக மாற்றப்பட்டது. அப்போதிருந்து அரசியல் பவுத்தம் நாட்டின் மேலாதிக்கம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தை பவுத்த பிம்பத்தில் மாற்றியமைக்கும் ஒரு ஒற்றை நோக்கத்துடன் ஒரு மேலாதிக்க இயக்கமாக மாற்றப்பட்டது. இந்த மேலாதிக்கவாதிகளுக்கு ஜனநாயக பன்மைவாதம் வெறுப்பை உண்டாக்கியது. அவர்கள் (தமிழர்கள்) இன்னும் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களது பணிக்கு ஆதரவளிக்க சில சக்திவாய்ந்த சக்திகள் உள்ளன என சிங்கள மேலாதிக்கவாதிகள் நம்புகிறார்கள்.

ஜாதிக ஹெல உறுமய (ஜேஎச்யூ),  பொது பல சேனா (பிபிஎஸ்), சிங்கள ​​லே, மஹோசன் பலகய, இராவண பலகய, சிங்கள இராவய மற்றும் பல தற்காலிக அழுத்தக் குழுக்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மூலம் மேலாதிக்க இயக்கம் அரசியல் ரீதியாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.  இந்த இயக்கத்தை ஆதரிக்கச் சில சக்திவாய்ந்த ஊடகக் குழுக்கள் உள்ளன. எவ்வாறாயினும், இந்த இயக்கத்திற்கான உண்மையான சக்தி தளம் பவுத்த சங்கத்திற்குள் உள்ளது. உண்மையில், இரண்டு தேரர்கள், பவுத்த பொதுசல சேனாவின்   செயலாளரான வண. கலகொட அத்தே ஞானசாரதேரர் மற்றும் வண. ஜாதிகஹெல உறுமய அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான அதுரலியே இரத்னா தேரர் பவுத்த மேலாதிக்கத்திற்காக பலமாகக்   குரல் கொடுக்கும் பிரச்சாரகர்கள் ஆவர்.Image result for sri lanka presidential election 2019 polls

யூன் 7 ஆம் திகதி கண்டியில் நடந்த ஒரு  ஆர்ப்பாட்டப்  பேரணியில் ஞானசாரார் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ மறுதலிக்கவில்லை. சிறீலங்கா சிங்கள பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் அவர்கள்தான் இந்தத்  தீவின் ஒரே உரிமையாளர்கள் எனக் கூறினார். அவர் கூறியதன் ஆபத்தான தாக்கங்களைப் பற்றிச்  சிந்திக்காமல், ஞானசாரார் நாட்டின் பிற சிறுபான்மையினரை ஏறக்குறைய குடியுரிமையற்றவர்கள் எனச் சொன்னார்.  மற்றொரு சந்தர்ப்பத்தில், இஸ்லாமிய  அடிப்படைவாத சித்தாந்தத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அரசாங்க அதிகாரிகள் முஸ்லீம்களை பவுத்த குருமாரிடம் விட்டுவிடும்படி கேட்டார். அப்படி விட்டால்  முஸ்லிம்களது மனங்களில் இருந்து அடிப்படைவாத  சித்தாந்தத்தில் இருந்து அவர்களது மனதைச் சுத்தப்படுத்தி இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் பாதுகாப்பார்கள். ஒருவேளை, மறு கல்வி என்ற பெயரில் சீன அரசாங்கம் தற்போது உய்குர் சமூகத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். இந்தத் தேரரின்  மிக  அண்மைய  மற்றும் அப்பட்டமான அடாவடித்தனம்  முல்லைத்தீவில் உள்ள ஒரு இந்து கோவிலின் வளாகத்தில் அவரது சக தேரர் ஒருவரின் சடலத்தைத் தகனம் செய்தது. தனது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தபோதும் அவர் அதைச் செய்தார். இந்தத் தேரர் முன்னர் நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைக்கு அனுப்பப்பட்டவர்.  ஆனால் இந்த ஆண்டு வெசாக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக ஜனாதிபதி சிறிசேனா அவருக்கு பொதுமன்னிப்பு அளித்து  விடுவிக்கப்பட்டவர் என்பதை அவர் (ஞானசேரர்) கவனத்தில் கொள்ள வேண்டும்.  Image result for sri lanka rathana thero

இதேபோல், வண. இரத்ன தேரர் இரண்டு ஆளுநர்களையும் ஒரு அமைச்சரையும் நீக்கக் கோரி தலதா மாலிகாவுக்கு முன் மிகவும் நாடகமயப்படுத்தப்பட்ட உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அந்த மூவரும் முஸ்லிம்கள். அவர்கள் தங்களை வளப்படுத்தத் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப்  பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மட்டும்தான் தங்களை வளப்படுத்த தங்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தினார்களா? எப்படியிருந்தாலும் அவர் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றார்.  அவரது உண்ணாவிரதம் அனைத்து முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும்  பிரதி அமைச்சர்கள்  எல்லோரையும் அமைச்சரவையில் இருந்து கூண்டோடு  பதவி விலக வைத்தார்.  இந்தத் தேரர்   சிங்கள பிறப்பு வீதத்தைக் குறைக்கும் நோக்கில், கர்ப்பிணிச் சிங்கள தாய்மார்களுக்கு சட்டவிரோத அறுவை மருத்துவம் செய்தார் எனக் குற்றம்சாட்டி ஒரு முஸ்லீம் மகளிர் மருத்துவ நிபுணருக்கு எதிரான பிரச்சாரத்துக்கு முன்னிலை வகித்தார். அந்தக்  குற்றச்சாட்டை எண்பிக்க  எந்தச் சான்றும்  இல்லை எனக் குற்றவியல் விசாரணைத் திணைக்களம்  விசாரித்து அறிக்கை அளித்தபோதும் குறித்த தேரர்  குற்றவியல் விசாரணைத்  திணைக்களம் திறனற்றது என விமர்ச்சித்தார். அவர் இப்போது நாட்டில் உள்ள அனைத்து திருமண மற்றும் மணமுறிவு  சட்டங்களையும் ஒரே மாதிரியாக மாற்றுவதற்கான ‘ஒரு நாடு ஒரு சட்டம்’  என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். முஸ்லீம் திருமணம் மற்றும் மணமுறிவுச் சட்டம் திருத்தப்பட்டு சட்டமியற்றப்பட்டு வரும் நேரத்தில் அவர் இந்தப்  பிரச்சாரத்தை  தொடக்கினார்  என்பது அவரது முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துகிறது.Image result for sri lanka presidential election 2019 polls

பவுத்த  மேலாதிக்கத்தின் மிகவும் கவலையான அம்சம் என்னவென்றால் பவுத்த தேரர்கள்  சட்டரீதியான தண்டனை எதுவுமின்றி செயற்பட அனுமதிக்கப் படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, குறிப்பாக 2014 முதல் தொடர்ச்சியான முஸ்லீம் – விரோத கலவரங்கள் இடம்பெற்றன. அபோது குறைந்தது ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டார்,  பலர் காயமடைந்தார்கள் மற்றும் பல மசூதிகள், முஸ்லீம் வணிகங்கள் மற்றும் முஸ்லீம் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இந்தக் கலவரங்களில் பெரும்பாலானவற்றில் காவல்துறையினர் பார்வையாளர்களாகவே இருந்தனர். கலகக்காரர்களையும் அவர்களை வெறுமனே  பார்க்கும் போலீஸ்காரர்களையும் அடையாளம் காட்ட   காணொளி ஆதாரங்கள் உள்ளன. ஆயினும்கூட, இன்று வரை குற்றவாளிகள் யாரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை. இந்தச்  சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து முழுமையான மவுனமே காணப்பட்டது. இந்தத்  தலைவர்களிடம் இருந்து ஒரு கண்டனச் சொல் கூட வெளிவரவில்லை. இந்த மதவெறியர்களைச் சவால் செய்யத் துணிந்த ஒரு அமைச்சர் பவுத்த மதகுருக்களின் ஒரு பிரிவினரால் ஒதுக்கி வைக்கப்பட்டார். பவுத்த மேலாதிக்கவாதிகள் சட்டரீதியான தண்டனைக்கு அப்பால் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளின்  ஆதரவிலும் செயல்படுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் நாடு ஜனாதிபதித் தேர்தலின் பிடியில் உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் 35  வேட்பாளர்களில் உண்மையான போட்டி  இருவருக்கு இடையில்தான் உள்ளது, அந்த இருவர் ஐக்கிய சனநாயக முன்னணியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசா மற்றும் சிறிலங்கா பொதுசன சுதந்திர முன்னணியைச் சேர்ந்த கோட்டபய இராசபக்ச ஆவர். இன்னொருவர் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் அனுரா குமார திசாநாயக்க மூன்றாவது இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு முன்னணி வேட்பாளர்களில் இருவருமே தங்கள் ஆதரவைப் பற்றியோ அல்லது மேலாதிக்கவாத நிகழ்ச்சி நிரல் பற்றியோ  தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை.  அவர்களது மவுனத்துக்குரிய காரணம் வெளிப்படையானது. பவுத்த வாக்கு வங்கியின் மீது மேலாதிக்கவாதிகளின் செல்வாக்கிற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமே அவர்களின் மவுனத்திற்கான காரணம் ஆகும்.  இந்த மேலாதிக்கவாதிகள் இந்த நேரத்தில் மவுனமக இருந்தாலும் அநேகமாகத் தங்களது “ஹிட்லர் போன்ற” வேட்பாளர் கோட்டாவை வெற்றிபெற உதவும் ஒரு தந்திரோபாய சூழ்ச்சியாக  (அஸ்கிரியா மதபீடத்தின் அனுநாயக்காவைச் சேர்ந்த வண. வேதாருவே உபாலி தேரர், கோட்டா ஒரு ஹிட்லராக மாறி ஓர் இராணுவ ஆட்சியை நடத்துங்கள் எனக் கூறியிருந்தார்) இருக்கலாம்.  தேர்தல் முடிந்ததும் அவர்கள் தங்கள் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குவது உறுதி. பவுத்த  மதத்திற்கு முதன்மையான இடத்தைத் தருவதாக சஜித் உறுதியளித்துள்ளார்.  மேலும் 1000 சைத்தியங்களைக் கட்டுவதாக உறுதியளித்துள்ளார். மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு பற்றிய அவரது பகட்டுப் பேச்சு  அனைத்தையும் மீறி, அவர் மேலாதிக்க அழுத்தத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கா  மட்டுமே இதுவரை எந்தவொரு மத உறுதிப்பாட்டிலிருந்தும் தன்னைத் தூர விலக்கிக் கொண்டுள்ளார். அவர் முற்றிலும் மாறுபட்ட மேடைப்  பிரச்சாரம் செய்து வருகிறார்.  இந்தப் போட்டியில்  சிறுபான்மையினருக்கு என்ன விருப்பத் தேர்வுகள் உள்ளன?Image result for sri lanka presidential election 2019 polls

இரண்டு சிறுபான்மையினரில், தமிழர்கள் சோகமான இக்கட்டான நிலையில் உள்ளனர். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தபோது அவர்களுக்கு ஒரு கூட்டாட்சி அரசாங்க அமைப்பைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை இழந்த பின்னர், சுதந்திரத்திற்குப் பிறகு, தங்கள் இந்திய சகோதரர்களின்  குடியுரிமையைப் பறித்த  சேனநாயக்க அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு சுய-அழிவுக்குக் காரணமாக இருந்தார்கள்.  தமிழ்த்  தலைமை  ஏனைய பிற சிறுபான்மையினரின் ஆதரவின்றித் தமிழ் அரசு ஒன்றைத்  தனித்து ஒரு கையால் அடையலாம் என்று கனவு கண்டது. 2009 ஆம் ஆண்டு இது ஒரு ஒறுப்பான  மற்றும் நம்பமுடியாத கனவு என்பதைத் தெளிவாக எண்பித்தது. அப்போதிருந்து, அவர்கள் ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணங்கள் அடங்கிய  ஒரு மாகாண சபை மூலமாக, குறைந்த பட்சம் சுயாட்சியை அடைய முயன்றனர்.  அது முடியாவிட்டால், இரண்டு தனித்தனி சபைகள் மூலமாக ஆனால் விரிவான அதிகாரங்களுடன் அமைக்க முயன்றனர். 2015 ஆம் ஆண்டு முதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யஹாபாலன அரசாங்கத்துடன் சேர்ந்து அரசியலமைப்பு மாற்றங்கள் மூலம் அதன் குறிக்கோள்களில் சிலவற்றையாவது அடைய வேண்டும் என விரும்பியது. செயல்படாத அரசாங்கம்  என சிங்களவர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதையும் சாதிக்க முடியாது போய்விட்டது. இப்போது தமிழ்த் தலைமையே நம்பிக்கையற்ற முறையில் பிளவுபட்டுள்ளது.

இருப்பினும், தமிழ் இளைஞர்களின் அழுத்தத்தின் காரணமாக ஒற்றுமையை வெளிக்காட்டும்  ஒரு அரிய நிகழ்ச்சி இடம்பெற்றது.  அனைத்துப் பிரிவுகளும் ஒன்று கூடி கோரிக்கைகளின் தொகுப்பை உருவாக்கி, பதின்மூன்று கோரிக்கைகளை  (எண் சோதிடத்தை நம்பும் மூடநம்பிக்கையாளர் என்றால் இது  துரதிர்ஷ்டவசமான எண்!)  இரண்டு முன்னணி வேட்பாளர்களுக்கு முன் வைத்தார்கள்.  அந்தக்  கோரிக்கைகளை ஏற்றுக்கொள்பவருக்கு ஆதரவு என அறிவித்தார்கள்.   தமிழர்களைப் பொறுத்தளவில் இது ஒரு விசித்திரமான இராசதந்திரம். இந்தக் கோரிக்கைகள்  இரு வேட்பாளர்களாலும்  நிராகரிக்கப்பட  வேண்டுமென்றே அவை  வரையப்பட்டதாகத்  தெரிகிறது.  தமிழ்த் தலைவர்கள் இணைப்பாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையின் கீழ் தீர்வுகாண எடுத்த முயற்சி இதுவாகும்.   ‘தமிழர் தாயகம்’ என்ற சொற்பதம் எந்தச்  சிங்களத்  தலைவருக்கும் விழுங்குவதற்கு விஷம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.  சஜித் மற்றும் கோட்டபய  ஆகியோரால்  அந்தக் கோரிக்கைள்  நிராகரிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.  அந்த கோரிக்கைகளில்  மிகவும் நியாயமான கோரிக்கைகளை  தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தீர்வு காண விருப்பத்தை வெளிப்படுத்தினால் அதனைத் தேர்தலில் வெல்ல வைக்க  வேண்டும். எனவே  தமிழர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?  2005 இல் அவர்கள் (விடுதலைப் புலிகள்)  செய்தது போல் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்ய வேண்டுமா? அப்படிச் செய்தால் அது கோட்டபயவுக்கு அனுகூலமாக அமையலாம். அல்லது, அவர்கள் இரண்டு தீமைகளில் குறைவான தீமை எனக் கருதப்படும்  சஜித்துடன் சேர்ந்து பிரச்சினையைத் தீர்ப்பதில் எந்தவிதமான அர்ப்பணிப்பும் இல்லாமல் அவரை வெல்ல வைக்க  வேண்டுமா? அல்லது, அவர்கள் தங்கள் செயலை வேறு இடத்திலும் 2019 க்கு அப்பாலும் கவனம் செலுத்த வேண்டுமா?

முஸ்லீம் சமூகம் தமிழர்களை விட மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது.  ஏனெனில், அமைச்சரவை அந்தஸ்தையும் பதவிகளையும் தவிர்த்த தமிழ் தலைமையைப் போலல்லாமல், உயர்ந்த காரணத்திற்காக போராடும் ஆர்வத்தில் (அந்த காரணம் முறையானதா இல்லையா என்பது வேறு விஷயம்), இன்றைய முஸ்லீம் தலைமையின் தலைமுறை என்பது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களது உரிமைகளுக்குப் போராடுகிறோம் என்ற போர்வையில் சுய செல்வாக்கை வளர்ப்பதில் அக்கறை கொண்டது. முன்பே பதிவுசெய்யப்பட்ட நாடாவைப் போல முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடுவது மற்றும் வெல்வது பற்றி மீண்டும் மீண்டும் கூச்சலிடுகிறார்கள். ஆனால் அந்த உரிமைகள் என்ன, அவர்கள் எவ்வாறு போராடப் போகிறார்கள் என்பதை ஒருபோதும்  சொன்னது கிடையாது.   ஒரு ஜனநாயகத்தில் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான சிறப்பு உரிமைகள் உள்ளதா? முஸ்லிம்களுக்கு  எதிரான அநீதியை அகற்றப்  போராடுவதும், மற்றவர்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளைக் கோருவதும் முறையானது. அப்படியான போராட்டத்தில் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஜனநாயக மற்றும் நியாயமான எண்ணமுள்ள  நபரும் சேருவார்.  அந்த நபர் முஸ்லீம், தமிழ் அல்லது சிங்களவர் எவராகவும் இருக்கலாம்.  இதைவிட  முஸ்லிம்களுக்குச்  சில தனித்துவமான உரிமைகள் இருந்தால், அந்த உரிமைகளின் நியாயத்தன்மை குறித்து மற்றவர்கள் முடிவெடுக்க அவர்களின் தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன என்பது உண்மை.  ஆனால் அவற்றில் பல சுயமாக உருவாக்கப்பட்டவை,

ஆனால் நேர்மையற்ற தலைமை காரணமாக அவற்றைத் தீர்க்கக்  கடினமாக உள்ளது. Image result for gnanasara thero released

வழக்கம்போல, வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம் தலைவர்கள் வெற்றியாளர் யாரென்பதில்  சூதாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  தனிப்பட்ட வெகுமதிகளையும் சுயகவுரவத்தையும் அனுபவிப்பதில் கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் தவறான மனிதர் இந்தப் போட்டியில் வென்றாலும், அவர்கள் தங்களைக்  காப்பாற்ற  யாருடைய காலடியில் எப்படி விழுவது என்பது அவர்களுக்குத் தெரியும். சுவாரஸ்யமாக, ஒரு முஸ்லீம் வேட்பாளரும் தனது வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக ஒரு சாதாரண தேர்தல் அறிக்கையுடன் போட்டியிடுகிறார். வரலாற்றில் தோல்வியுற்றதன் மூலம் வெற்றியைக் கோரும் ஒரே வேட்பாளராக அவர் இருப்பார். தெட்டத்தெளிவாக அவர் தனது புரவலர்களைத்  திருப்திப்படுத்த போட்டியிடுகிறார். இருந்தும் ஒட்டுமொத்த சமூகம் ஒரு பயங்கரமான சிக்கலை எதிர்கொள்கிறது, குறிப்பாக இரத்தக்களரி ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர்.

அதிகாரத்திற்காகப் போட்டியிடும் இரண்டு முக்கிய கட்சிகளான ஐதேக  மற்றும் எஸ்.எல்.பி.பி மற்றும் அந்தந்த கட்சிகளின்  ஜனாதிபதி வேட்பாளர்கள் மேலாதிக்கவாதிகளின் கடும் அழுத்தத்தின் கீழ் இருப்பதை இரு சிறுபான்மையினரும் உணர வேண்டிய நேரம் இது. கோட்டா மேலாதிக்கவாதிகளிளால் முழுமையாக ஆதரிக்கப்படுகிறார், அவர்களை எதிர்த்து நிற்க சஜித்தால்  முடியாது. சிறுபான்மையினரின் ஆதரவோடு சஜித் வெற்றி பெற்றாலும் மேலாதிக்கவாதிகளின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட அவரால் முடியாது இருக்கும்.  இறுதியில், நாட்டின் பன்மை ஜனநாயகம் மற்றும் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படும். சிறுபான்மையினர் என்ன செய்ய வேண்டும்?

அவர்களது (சிறுபான்மையினர்) பார்வை ஜனாதிபதித் தேர்தலைத் தாண்டி அடுத்த பொதுத் தேர்தலை நோக்கியே இருக்க வேண்டும். சிங்கள மக்களிடம்  இருந்து தங்களது கோரிக்கைகளுக்கு  அனுதாபம் இல்லாவிட்டால் தமிழர்கள் தங்கள் கோரிக்கைகளில் எதையும் வெல்ல முடியாது. குறிப்பாக, அவர்கள் சார்பாகப் பேசக்கூடிய ஒரு சிங்களக்   குரலை அவர்கள் தேட வேண்டும், அந்தக் குரல் தமிழர்கள் சார்பாக மட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களின் சார்பிலும் பேச வேண்டும். நடைமுறையில் உள்ள இன-ஜனநாயகத்தில், ஆளும் கட்சியும் அதன் எதிரிகளும் பவுத்த மேலாதிக்கத்தின் கட்டளைகளைக் கவனிக்கும்போது, சிறுபான்மையினர் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள். இதனால்தான் சிறுபான்மையினர் இருவரும் இன-தேசியவாதம் இல்லாத ஒரு மாற்றீட்டைத் தேட வேண்டும், அந்த மாற்றீடு  ஐயத்துக்கு இடமின்றித் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகும்.

அனுரா குமார திசாநாயக்க மேடையில் உறுதியான பொருளாதாரம்   முக்கியமானது எனப்  பிரச்சாரம் செய்கிறார். அவரது நோக்கம் எல்லாக் குடிமக்களுக்கும் சமமான மருத்துவம் வழங்குதல், அனைத்து அரசு அதிகாரிகளும் பொறுப்புக்கூறல் மற்றும்  சகிக்கமுடியாததாக மாறியுள்ள வருமான இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றுடன் நாட்டின் மோசமான கல்வி மற்றும் சுகாதார தரங்களை மேம்படுத்துவது மற்றும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது பற்றிப்  பேசும் ஒரே வேட்பாளர் அவர்தான்.  அவர் தனது கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, எங்கள் பள்ளிகளில் கற்பிக்க வேண்டிய பாடமாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். தன்மொழிக் கல்வி சிங்களம் மற்றும் தமிழ் நடுத்தர பட்டதாரிகளை ஒருங்கிணைந்த உலகில் வேலை சந்தைகளுக்கு அணுகுவதை இழந்துவிட்டது. தற்போது அவர்களின் ஒரே வழி பொதுத்துறையில் வேலை தேடுவதேயாகும், மேலும் அந்தத் துறை கோப்புத் – தள்ளுபவர்களால் சுமையாக உள்ளது. ஒரு அறிக்கையின்படி பொதுத்துறையில்  1.5 மில்லியன் ஊழியர்கள்  800,000 பணியாளர்களின் வேலையைச் செய்கிறார்கள் (ஐலன்ட், 13 அக்டோபர் 2019, தலையங்கம்). எத்துணை பணமும் திறமையும் வீணாகிறது! AKD இன் அறிவிப்புகள் கவனமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்திலிருந்து வெளிவருவதாகத் தெரிகிறது, அதை அவர் முழுமையாக வெளியிட வேண்டும்.     

ஏ.கே.டிக்கு மாறாக, மற்ற இரண்டு வேட்பாளர்கள் VAT வரியை  15 விழுக்காட்டில் இருந்து  8 விழுக்காடாகக்  குறைத்தல், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவை அறிமுகப்படுத்துதல், தோட்டத் தொழிலாளர்களின்  நாளாந்த  ஊதியத்தை ரூபா1500 / = ஆக அதிகரித்தல், தேசிய ஒற்றுமை, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சமூக ஒற்றுமையை அடைவதற்கான ஒரு விரிவான மூலோபாயம் அல்லது திட்டம் இல்லாமல் வட்டி விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல்  போன்றவை அவர்களின் வாக்குறுதிகள் ஆகும்.  மற்றச் சிக்கல்களைச் சமாளிக்காமல் நாடு எதிர்கொள்ளும் பொருளாதாரப்  பிரச்சினைகளை ஒட்டுவேலை மற்றும் தனிமையில் சரிசெய்ய முடியாது.

ஏகேடி மற்றும் அவரது என்பிபி ஆகியவை ஜனாதிபதிக்கான போட்டியில் வெல்ல முடியாமல் போகலாம்.  ஆனால் அடுத்த நாடாளுமன்றத்தில் ஒரு சக்திவாய்ந்த மாற்றாக மாற அவர்களின் கைகளைப்  பலப்படுத்தப்பட வேண்டும். சர்வோதயா ஆதரவு NPM,  NPP உடன் ஒன்றிணைக்க முடிந்தால் அது நாட்டுக்கு நல்லது. தமிழர்களும் முஸ்லிம்களும் தங்கள் தலைவர்களைப் புறக்கணித்து இந்த முற்போக்கான சக்திகளுக்குப் பின்னால் தங்கள் ஆதரவை நல்க  வேண்டும். சிறுபான்மையினரும் அனைத்து இலங்கையர்களும் சமாதானமாகவும் செழிப்பாகவும் வாழ, நாட்டில்  ஒரு தீவிர மாற்றம் தேவை.

ஊழல், சர்வாதிகாரவாதம், வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு எதிரான  பொதுமக்களின் வெளிப்படையான கிளர்ச்சியைக் கண்ட லெபனான், ஹொங் கொங், சிலி மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் தவறான அரசு மற்றும் தவறான நிர்வாகத்தால்  தாங்கமுடியாத கஷ்டங்களுக்கு மத்தியில் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமைக்கான சிங்கள மக்களின்  திறனை ஆச்சரியத்தோடு  பாராட்ட வேண்டும். (தமிழாக்கம் நக்கீரன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்