எதிர்கட்சியினர் இயலாமையை காட்டுவதற்கு என்னை பயன்படுத்துகின்றனர்- ரவூப் ஹக்கீம்

எதிர்கட்சியினர் தங்களது இயலாமையைக் காட்டுவதற்காகவே என்னையும் சஹ்ரானையும் இணைத்து விமர்சனங்களை பரப்பி வருகின்றனரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது, “ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை இலகுவில் பட்டியலிட்டு முடிக்க முடியாது.

பாதாள கும்பலை ஒழிப்பதாகக் கூறி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஏராளமான உயிர்களை காவுகொண்ட வரலாறுகள் ஏராளமாக உள்ளன. எவ்விதமான விசாரணைகளும் தடயங்களும் இல்லாமல் பல உயிர்கள் வேட்டையாடப்பட்டன.

பாதாள உலகக் கும்பலை ஒழிப்பதை நாங்கள் தவறாக கூறவில்லை. அதனை சட்டத்தின் பிரகாரம், நீதி நியாயத்தோடு மேற்கொண்டிருக்க வேண்டும்.

எவ்வித கணக்கு வழக்குமின்றி உயிர்களை கொன்று புதைப்பது முறையல்ல. எங்களது ஆட்சியிலும் பாதாள உலகக் கும்பலை ஒழிப்பதற்கு பல நடவடிக்கைள் சட்டரீதியில் மேற்கொள்ளப்பட்டன.

ராஜபக்ஷ ஆட்சி போன்று எங்களது ஆட்சியில் எந்த முறைகேடான சம்பவங்களும் இடம்பெறவில்லை.

ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்றது போல, ஆட்களை கடத்திச்சென்று காணாமலாக்கி மறுநாள் கொன்றுவிட்டு காட்டுக்குள் புதைக்கின்ற சம்பவங்கள் எங்களது ஆட்சியில் நடைபெறவில்லை. இதுவே எங்களது அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும்.

சமூகத்திலிருக்கும் தீயதை ஒழிப்பதற்கு ஒரு நியாயமான முறை இருக்கிறது. அதை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்.

ஆட்சியை பின்கதவால் பறிப்பதற்கு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட அட்டகாசம் போன்றதொரு விடயத்தை எனது 25 வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் கண்டதில்லை.

எதிர்க்கட்சியில் இருக்கும்போதே இவ்வளவு அட்டகாசம் புரிந்தவர்கள் ஆளும் கட்சியில் இருந்தால் நிலைமை இன்னும் தலைகீழாக மாறும்.

இத்தகையவர்களிடம் ஆட்சியைக் கொடுத்தால், நாம் இதைவிட பல மடங்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இதேவேளை எதிர்கட்சியினர் தங்களது இயலாமையைக் காட்டுவதற்காக என்னையும் சஹ்ரானையும் இணைத்து பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்