மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படையினர் விடுவிக்கப்படுவர் – கோட்டா உறுதி

போரின்போது மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைத்து இலங்கை படையினரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

ஆயுதங்களுடன் சரணடைந்த 13,784 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை மன்னிக்கவும் புனர்வாழ்வு அளித்து விடுவிக்கவும் தாங்கள் நடவடிக்கை எடுத்தபோதிலும் போர்க்காலத்துடன் தொடர்புபட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட படையினர் தொடர்பாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை படையினர் மட்டுமல்லாமல், போர் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் புலிகளின் உறுப்பினர்களும் சமூகத்தில் முறையாக மறுவாழ்வு அளிக்கப்பட்டு மீள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் இலங்கையில் தேவையற்ற குறுக்கீடு செய்ய அனுமதிக்கப்போவதில்லை என்றும் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்