முச்சக்கரவண்டி சாரதியை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய இளைஞன் கைது

வவுனியாவில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி சென்றவர்கள், அதற்குரிய பணத்தை கொடுக்காமல் சாரதியை கூரிய ஆயுதத்தினால்  தாக்கியுள்ளனர். இதனால் அவர் படுகாயமடைந்துள்ளார்

இந்நிலையில்  சம்பவத்திற்கு காரணமான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திய இளைஞர்கள் மூவர், வவுனியா வேப்பங்குளம் 6 ஆம் ஒழுங்கை பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலடியில் சென்று இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்குசென்ற பின்னர் முச்சக்கர வண்டிக்கான வாடகை பணமான 250 ரூபாயை முச்சக்கரவண்டியின் ஓட்டுநர் கேட்டபோது,  பணத்தை தர முடியாது என கூறி முச்சக்கர வண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் முச்சக்கர வண்டியையும் சேதமாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த ஏனைய  முச்சக்கரவண்டி சாரதிகள், அவசர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞனை கைது செய்ததுடன் அவரிடமிருந்து கூரிய ஆயதங்களையும் மீட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியான பா.சிறிதரனை (வயது 51) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்