சிறுவன் சுஜித் காப்பாற்றப்பட வேண்டி யாழ். கோப்பாயில் பிரார்த்தனை

ஆழ் கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை சுஜித் உயிருடன் பத்திரமாக மீள வேண்டுமென இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாயில் மக்கள் திரண்டு மௌனப்பிரார்த்தனை செலுத்தினர்.

வலிகாம் கிழக்குப் பிரதேச சபை (உள்ளூராட்சி மன்ற) தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத்தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எனப்பலரும் ஒன்று கூடினர்.

தமிழ்நாடு திருச்சி மாவட்டம் மணற்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டிக் கிராமத்தில் கைவிடப்பட்டிருந்த ஆள் கிணற்றுக்குள் அறியாமல் சிக்கிக் கொண்ட சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து மௌனப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இப் பிரார்த்தனையில் மனித நேயக்கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. இதில் கருத்துரைத்த வலிகாமம் கிழக்குப் பிதேச சபைத் தவிசாளர்இ ஒரு சிறுவன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான். அச் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்த உலகில் வாழவேண்டும். அதற்காக இலங்கையில் இருந்து கொண்டு எமது வேண்டுதல்களை வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

இன்றைய தினம் தீபாவளி தினம். எமது மக்கள் வெகுவிமர்சையாக இத் தினத்தினை கொண்டாடுவர். ஆனால்இ இம்முறை எமது பிரதேசங்களில் எல்லோரும் குழந்தை காப்பாற்றப்பட்டுவிட்டதா? காப்பாற்றப்பட்டுவிட்டதா? என்ற ஏக்கத்தினையே வெளிப்படுத்துகின்றனர். இன்று காலை முதல் என்னைச் சந்தித்த சகலரிடமும் நான் அதனைக் காண்கின்றேன்.

இரவிரவாக தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் நேரடி தொலைக்காட்சி அலைவரிசைகள் வாயிலாக சிறுவனின் மீட்பு நடவடிக்கைகளில் என்ன முன்னேற்றம் என்றே நாம் காத்திருக்கின்றோம். சிறுவனது மீட்பில் தொண்டர்கள்இ மீட்புப் படையணிகள் ஈடுபட்டுள்ளமையினையிட்டு மனத்திருப்தியுடன் பார்க்கின்றோம். அமைச்சரான விஜயபாஸ்கர் அவருடன் வெல்லமண்டி நடராஜா ஆகியோர் களத்தில் நிற்கின்றார் என்பதை அறிந்து கொள்கின்றோம். தொடர்ச்சியாக அரசின் பொறுப்புணர்வினையும் எதிர்பார்க்கின்றோம்.

மணித்தியாலங்கள் கடக்கின்றமையும் தொழிநுட்ப ரீதியிலான முயற்சிகளில் நிலவும் தாமதங்களும் இயற்கையின் இடையூறுகளும் நாம் பதைத்துப்போகின்றோம். இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படுகையில் எம் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்படும் போது தமிழ்நாட்டில் பொதுமக்கள் எந்தளவு தூரம் பதைத்தீர்களோ அதுபோன்ற பதைப்பினையும் பிரார்த்தனையினையும் ஈழத்தமிழர்களான நாம் கொண்டிருக்கின்றோம். இன்றைய தீபாவளி தினத்தினை சுஜத்திற்கான பிரார்த்தனையுடனான காத்திருப்பாகவே நாம் கடக்கின்றோம். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்