ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் – ரிஷாட் விளக்கம்!

இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? அல்லது சிறுபான்மை இனத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இதுவென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து குருநாகல், கால்லேகமவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “கடந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் முஸ்லிம் சமூகத்தின் மீது இனசங்காரம் செய்தவர்கள், எந்தக் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஈஸ்டர்  பயங்கரவாத செயலுடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்தி, அவர்களை புண்படுத்திய இனவாதக் கட்சிகளின் தலைவர்களும் வங்குரோத்து அரசியல்வாதிகளும் தற்போது எந்த வேட்பாளருடன் கைகோர்த்துள்ளார்கள் என்பதும் நமக்கு நன்கு தெரியும்.

கடந்த காலங்களிலும் அண்மைய காலங்களிலும் நமது சமூகத்தின் மீது அட்டூழியங்கள் நடந்தபோது, அதனை தட்டிக் கேட்காதவர்களும், வன்செயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வந்து, மக்களை எட்டிப் பார்க்காத நம்மவர்கள் சிலரும் இப்போது மொட்டுக் கட்சிக்காக, முஸ்லிம் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை இரந்து கேட்கின்றார்கள்.

விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும், எஸ்.பி. திஸாநாயக்கவும் கோட்டாபய ராஜபக்ஷதான் வேட்பாளராக வரவேண்டுமென்று அடம்பிடித்ததும் அவரைதான் ஜனாதிபதியாக்க வேண்டுமென்று கங்கணம்கட்டித் திரிவதும் எதற்காக? அதிகாரம் கிடைத்த பின்னர், முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் சமூகத்தின் விழுமியங்களையும் இல்லாமல் ஆக்குவதே இவர்களின் திட்டமிட்ட நோக்கமாகும்.

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகள் பெருவாரியாக இருந்தபோதும் கடந்த தேர்தலில், துரதிஷ்ட வசமாக முஸ்லிம் ஒருவரை பெறமுடியாத நிலை ஏற்பட்டது. நமது வாக்குகள் மிகவும் பெறுமதியானது. அந்தவகையில், இனி வரும் தேர்தல்களில், நாம் புத்திசாதுரியமாகவும் தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்