ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டார் – ட்ரம்ப் விசேட அறிவிப்பு

உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதியை நேற்றிரவு அமெரிக்க படையினர் கொலை செய்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதையொன்றிற்குள் சிக்குப்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி தன்னை வெடிக்கவைத்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரபணு பரிசோதனைகள் கொல்லப்பட்டவர் அல்பக்தாதி என்பதை உறுதி செய்துள்ளன எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றிய ட்ரம்ப், “சிறப்புப் படையினரால் சுரங்கப்பாதையின் எல்லையில் பிடிபட்ட பின்னர் அபுபக்கர் அல் பாக்தாதி தனது தற்கொலை உடையை வெடிக்கச் செய்தார்.

பாக்தாதி தனது மூன்று இளம் பிள்ளைகளுடன் இருந்தார். இந்நிலையில் அவர் சுற்றிவளைக்கப்பட்டபோது அவரது தற்கொலை உடையை வெடிக்கச் செய்து அருகில் இருந்தவர்களையும் கொன்றார்.

இந்நிலையில், குண்டுவெடிப்பு பாக்தாதியின் உடலை சிதைத்த நிலையில், டி.என்.ஏ சோதனைகள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின” என ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளில் “கலிபா” ஒன்றை உருவாக்குவதாக அறிவித்தபோது, ​​பாக்தாதி என்பவர் 2014 இல் முக்கியத்துவம் பெற்றார். இவ்வாறு உருவான ஐ.எஸ். அமைப்பு பல கொடுமைகளை நடத்தியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

ஜிஹாதி குழு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்கள் மீது ஒரு மிருகத்தனமான ஆட்சியை நடத்தியது. அத்துடன் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பல தாக்குதல்களுக்கு காரணமாகவும் குறித்த அமைப்பு இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் “கலிபா” தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்