அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பொருளாதார கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது – கோட்டா!

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார கட்டமைப்பும் ஸ்தம்பிதமடைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மஹிந்த ராஜபக்ஷவை அவமானம் செய்வதற்காகவே, மத்தளை சர்வதேச விமானநிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்றினார்கள்.

இதனால், ஒட்டு மொத்த மக்களும் அதிருப்தியடைந்தார்கள். இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் இன்று இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார கட்டமைப்பும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதுதான் இன்றைய நிலைமையாக இருக்கிறது. இந்த நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதைத் தான் மக்கள் எம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள்.

அன்று விடுதலைப் புலிகளை நாம் தோற்கடித்தோம். இதற்குப் பின்னர் புலிகளின் தலைவராக கருதப்பட்ட கே.பி. எனும் குமரன் பத்மநாதன் மலேசியாவில் இருந்துக்கொண்டு அறிக்கையொன்றை வெளியிட்டார்.

ஆனால், நாம் அப்போதே புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் குறுகிய காலத்திலேயே அவரை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தோம்.

எனினும், இந்த அரசாங்கம் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் முன்கூட்டியே சர்வதேச புலனாய்வுப் பிரிவுகள் வழங்கியும், மக்களுக்கான பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது.

சர்வதேசத்தின் ஆலோசனைக்கு இணங்க செயற்படும் மற்றும் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட அரச சார்பற்ற நிறுவுனங்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படும் அமைச்சரவையொன்றினால், எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்