இணைப்புச் செயலாளர் கோல்டன் பெர்ணான்டோவிற்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணைப்புச் செயலாளரான வைத்தியர் கோல்டன் பெர்ணான்டோ கடந்த காலங்களில் வட, கிழக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதியின் நல்லிணக்கச் செயலாளராக செயற்பட்டு வந்திருந்தார். இவர் கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமைத்துவத்தின் கீழான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு அமோக ஆதரவை வட,கிழக்கில் பெற்றுக்கொடுத்து, கிழக்கில் அதிக வாக்குப் பலத்தினை குறிப்பாக மட்டக்களப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு செங்கலடி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தினை மக்களது ஆதரவுடன் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறவுள்ளதால் இவருக்கு வட, கிழக்கில் உள்ள மக்கள் ஆதரவினை உணர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தன்னை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களின் வெற்றியினை உறுதிப்படுத்த உதவுமாறும், வெற்றியின் பின்னர் தொடர்ச்சியாக தற்போது உள்ள பதவியிலே இருந்து கொண்டு வட, கிழக்கு மக்களுக்கு முன்னர் ஆற்றிய சேவையினை விடவும் அதிகப்படியான சேவையினை செய்வதற்கான வசதி வாய்ப்பினை ஐக்கிய தேசிய கட்சி ஏற்படுத்தித்தருவதாகவும் கூறியுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் வைத்தியர் கோல்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இந்நிலையில் வட, கிழக்கில் பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் சார்பான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பிரச்சார கூட்டங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் இவர் கடந்த 20 வருடங்களாக வட, கிழக்கில் தமிழ் மக்களுக்காக அதிக சேவையினை ஆற்றியுள்ளமையினால் இவருக்கு கிடைத்துள்ள அழைப்பின் பிரகாரம் இவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வாராயின் ஐக்கிய தேசிய கட்சியின் பலம் வட, கிழக்கில் அதிகரிக்கக் கூடுமென புத்தியீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்