கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழர்களுக்குப் பெரும் ஏமாற்றமே!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்ட கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு – கிழக்குக்கு என்று விசேடமாக எந்தத் திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.

தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் திட்டங்கள் எதுவுமே இல்லாமல் கோட்டாபயவின் விஞ்ஞானம் வெளியிடப்பட்டுள்ளமை தமிழ்க் கட்சிகள் மத்தியில் கடும் விசனத்தை உண்டாக்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பா ளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் இந்தக் கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“பிளவுபடாத நாட்டில் வெளியாரின் தலையீடற்ற வகையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி யாரிடமும் கையேந்தாத மக்கள் என்ற நிலைமையை உருவாக்குவதே எனது நோக்கம்.

விவசாயிகளுக்கு இலவச உரம் , விவசாயிகளின் கடன்கள் இரத்து , பிராந்தியத்தில் சிறந்த வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுதல், தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபா சம்பள உயர்வு, மீனவர்களுக்கான மானியம், புதிய மின் சக்தி உருவாக்கம் ,பெண்களுக்கான சுயதொழில், அவர்களுக்குத் தொழில் கடன், போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல், மோசடிகளை ஒழிக்க விசேட செயற்திட்டம் என்பனவற்றை எனது செயற்றிட்டத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

நாட்டின் இறையாண்மை உறுதிப்படுத்தப்படும் வகையில் நாட்டைப் பிளவுபடுத்த நான் ஒருபோதும் இடமளியேன்.வெளிநாட்டு அநாவசியத் தலையீடுகளை நான் அனுமதிக்கவும் மாட்டேன்.

முப்படைகள் மற்றும் பொலிஸ் படைகளின் உறுப்பினர்களைப் பாதுகாப்பேன். ஜனநாயகத்தை மதித்து நீதியை மதித்து நடக்கும் அனைவருக்கும் சமமான நீதி என்ற நிலைமையை உருவாக்குவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்