ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னால் இருந்தவர் யார்? அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் – சமரசிங்க

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பின் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “குண்டுத்தாக்குதல் தேசிய பாதுகாப்பின் பலவீனத் தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எவ்விதமான புதிய உண்மைகளையும் பகிரங்கப்படுத்தவில்லை. மாறாக குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக சூட்சமமான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.

தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பலமான தலைமைத்துவத்தினை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம்.

இவரை தவிர்த்து பாதுகாப்பு துறையில் தேர்ச்சி பெற்றவர் எவரும் கிடையாது. எமது ஆட்சியில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் குறித்த மர்மங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.

அத்தோடு பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமானம் செய்யும் தினத்தில் இருந்து செயற்படுத்தப்படும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்