உங்கள் பிரச்சனை பற்றி எனக்கு தெரியும்: அதற்கான தீர்வையும் நான் வழங்குவேன்! வவுனியாவில் கோட்டபாய

உங்கள் பிரச்சனை பற்றி எனக்கு தெரியும். ஆழ்ந்த அறிவு எமக்கு இருக்கிறது. அதனால் அதற்கான தீர்வையும் நான் வழங்குவேன். என்னை நம்புக்கள் என பொதுஜன பெரமுன முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச வவுனியாவில் தெரிவித்துள்ளார்.


வவுனியா வைரவபுளியங்குளம், சிறுவர் பூங்கா மைத்தானத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொட்டும் மழைக்கும் மத்தியில் நடைபெற்ற இத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸவிதாரண, பிரபாகணேசன், வாசுதேவ நாணயக்கார, காதர் மஸ்தான், முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், நகர- பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கோட்டபாய மேலும் தெரிவிக்கையில்,

நாம் இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக தெளிவான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்துள்ளோம். இங்கு வாழ்கின்ளற மக்களில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத் துறையை நம்பி வாழ்கின்றார்கள். அந்த விவசாயத்தை முன்னேற்றுவதற்கான கொள்கையை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளோம். இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வறுமையில் வாடும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு பல யோசனைகளை முன்வைத்துள்ளோம். இதனால் உரப்பொதிகளை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளோம்.

கடன்பட்ட விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவுள்ளோம். உங்களுக்கு நல்லவிதைகள், பயிர்கள் கிடைத்திருந்தால் விவசாயத்தை முன்னேற்றியிருக்க முடியும். ஆனால் இந்த பிரதேசத்தில் நீர்பாசன பிரச்சனைகள் இருக்கின்றது. நாங்கள் நீர்பாசனத்தை மேம்படுத்துவோம். குளங்களை மீள கட்டியெழுப்புவோம். இந்த அரசாங்கம் விவசாயத்துறைக்கு எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. எமது அரசாங்கத்தின் கீழ் விவசாயத்திற்கு முதலிடம் வழங்குவோம்.

நல்ல விளைச்சளைத் தரக் கூடிய விதைகள், பயிர்கள் என்பவற்றை நாம் பெற்று தருவோம். இங்கு வாழ்க்கின்ற மக்களில் சிலருக்கு விவசாயம் செய்ய நிலம் இல்லை. தொழில் இல்லை. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு என்றாலும் நாம் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்போம். நாம் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தி தந்தோம். நாம் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. யுத்தத்தை முடித்து வைத்தோம். நான் இங்கு இருக்கும் தமிழ் மக்களுக்கு ஒரு விடயத்தை கூறி வைக்க விரும்புகின்றேன். இங்கு இருக்கும் ஒரு சில அரசியல் கட்சிகள் எமது கடந்த காலத்தை பிழை என்கிறார்கள். நான் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை காண்பிப்பேன். சௌபாக்கியமான வாழ்க்கையைப் பெற்றுத் தருவேன்.

சுதந்தித்திற்கு பின்னர் பல தலைவர்கள் பொய்யான உறுதிமொழிகளை வழங்கினார்கள். ஆனால் நான் செய்யக் கூடிய வாக்குறுதிகளை வழங்குகின்றேன். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு, இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதற்கு உங்களது திறமைகளை வளர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்தப் பிரதேசம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. இதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம். ஆனால் பின் வந்த அரசாங்கம் அதற்கு எந்த உதவியையும் செய்யவில்லை. அதனால் நாம் மீண்டும் இந்த பிரதேசத்தை கட்டியெழுப்புவோம். இந்தப் பிரதேசத்தில் நீர்பாசன வசதி செய்வதற்கும், இந்த பிரதேசத்தை மீண்டும் கட்டியழுப்புதவற்கும் வாக்கின் மூலம் பலத்தை தாருங்கள் என்று கேட்கின்றேன்.

இந்த நாட்டிலே பல இளைஞர், யுவதிகள் கவனிப்பாரற்ற நிலையில் நிர்கதியாக இருக்கின்றார்கள். பல இளைஞர்கள் உயர்தரத்தை கற்றுவிட்டு நிர்கதியாக நிற்கின்றார்கள். பட்டதாரிகளுக்கு வேலையில்லை. அவர்கள் பொருளாதாரத்தில் பங்களிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் திறமை இருந்தும் முன்னேற முடியாத நிலையில் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு தரமான கல்வியைப் பெற்றுக் கொடுத்து வாழ்க்கையை வளமாக்குவோம் என்பதை உறுதிப்படக் கூறிக் கொள்கின்றோம். உயர்தரத்தில் புதிய கற்கைளை உருவாக்குவோம். தொழிற்நுட்பக் கல்வியை கொண்டு வருவோம். பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை அதிகரிப்போம். புதிய பல்கலைக்கழக்கங்களை உருவாக்குவோம். கைத்தொழில் கல்லூரிகளை உருவாக்குவோம். இந்த உலகத்தில் திறமையுள்ளவர்களுக்கு எங்கும் வேலை கிடைக்கும். ஆனால் எமது நாட்டிலே கல்வித்தரம் குறைந்திருக்கின்றது. இந்த கல்வித்தரத்தை மாற்றி தரமான கல்வியை உருவாக்குவோம். கைத்தொழில், தொழில்நுட்ப கல்வியை உருவாக்கி அதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்போம்.

யுத்த காலத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் புனர்வாழ்வளித்தோம். உலகிலேயே மிகச் சிறந்த புனர்வாழ்வு நிலையமாக இலங்கை காணப்பட்டது. அவர்களை சமூகமயப்படுத்தினோம். அவர்களில் பலரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இணைந்தோம். அதேபோல் எதிர்காலத்தில் அவர்களது திறமையை வலுப்படுத்தி கைத்தொழில் துறையில் இணைப்போம். அவர்களும் நேரடியாக பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்ய ஆவண செய்வோம். உங்களுக்கும் எமக்கும் இருப்பது இந்த நாடு. சிறிலங்கா என்ற நாடு. இந்த நாட்டில் எல்லோரும் சந்தேகமின்றி, அச்சமன்றி வாழக்கூடிய நிலையை உருவாக்கிக் கொடுப்பேன் என்பதை உறுதிப்படக் கூறிக்கொள்கின்றேன்.

ஒரு சிலர் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு பொய் பிரச்சாரங்களை பரப்பினார்கள். அதை சிலர் நம்பினர்கள். அதனால் உங்களுக்கு நன்மைகள் பலவற்றையும், அபிவிருத்திகளையும் செய்த மஹிந்த ராஜபக்ஸ அவர்களை 2015 ஆம் ஆண்டு தோல்வியடைச் செய்தீர்கள். அந்த பொய் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என உங்களுக்கு தெரிவிக்கின்றோம். இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் பாதுகாப்பாக வாழும் நிலையை எம்மால் மட்டுமே உறுதிப்படுத்திக் கொடுக்க முடியும்.

சில அரசியல்வாதிகள் உங்கள் மத்தியில் இருக்கின்ற சில பிரச்சனைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்தார்கள். ஆனால் நாங்கள் உண்மையிலலேயே பல அபிவிருத்திகளை செய்தோம். தொடர்ந்தும் செய்வோம். அபிவிருத்தி மூலமாகவே வாழ்க்கையை வளம்பெறச் செய்ய முடியும். அபிவிருத்தி மூலமே வேலைவாய்ப்பு கௌரவம் கிடைக்கும். அதனை நாம் ஏற்படுத்துவோம். என்னை நம்புங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனக்கு தரப்பட்ட கடமைகளை நூற்றுக்கு நூறு வீதம் சரியாக செய்தவன் நான். உங்களுடைய பிரச்சனை பற்றி எனக்கு தெரியும். எமக்கு ஆழ்ந்த அறிவு இருக்கிறது. அதனால் அதற்கான தீர்வையும் பெற்றுத் தர முடியும். உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். பாதுகாப்பான சௌபாக்கியமான நாட்டை நான் உருவாக்குவேன் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்