சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்பில் பழனிசாமியிடம் கேட்டறிந்த மோடி!

பச்சிளம் பாலகன் சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது பச்சிளம் பாலகனை மீட்கும் பணி 66 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்கின்றது. நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகின்றது.

ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை தோண்டப்பட்ட பள்ளத்தில் தீயணைப்புப் படை வீரர் இறங்கினார் . ஏணி மூலம் இறங்கிய வீரர் பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாலகன் மீட்புப் பணி நடக்கும் இடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் ரவீந்திரநாத் எம்.பியும் சென்றிருந்தார்.

பாலகன் விழுந்த போர்வெலில் இருந்து இரண்டு மீற்றர் தூரத்தில் துளையிடும் பணிகள் செய்யப்பட்டன. ஆனால், அதில் பயன்படுத்தப்பட்ட ரிக் இயந்திரம் அடிக்கடி பழுது ஆனதாலும், தொடர்ந்து துளையிட முடியாமலும், வேகமாகத் துளையிட முடியாமலும் இருந்தது.

இந்தநிலையில், தற்போது போர் போடும் இயந்திரத்தைக் கொண்டு ஏற்கனவே பாதியளவில் போடப்பட்ட துளையை மூன்று துளைகளாகப் பிரித்து அதை அகலப்படுத்த தற்போது பணிகள் மேற்கொண்டு வருகின்றன. போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளையிடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதில் மூன்று துளைகள் தற்போது 65 அடி ஆழத்தை எட்டியுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், 36 மணிநேரம் கடந்து துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பாலகன், துளையில் சிக்கி தற்போது 70 மணி நேரம் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“பாலகன் சுர்ஜித் மீண்டுவரப் பிரார்த்திக்கின்றேன். சுர்ஜித்தைப் பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்புப்பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தேன்” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்