“மேக்கேத்தாட்டைத் தடுப்போம்!காவிரியைக் காப்போம்!” பரப்புரை தேதி தள்ளிவைப்பு – காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு!

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், 24.10.2019 மாலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவா திரு. க. செகதீசன், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் திரு. அல்லூர் கரிகாலன், இந்திய யூனியன் முசுலீம் லீக் மாவட்டத் தலைவர் திரு. செய்னுலாபுதீன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன். விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. போராளி மற்றும் காவிரி உரிமை மீட்புக் குழு செயல்பாட்டாளர்கள் திரு. தனசேகர், திரு. பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்ட விரிவான செயல் திட்ட அறிக்கை நடுவண் அரசுக்கு அனுப்பி அனுமதி கோரியுள்ளது. மேக்கேத்தாட்டு அணை கட்ட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருப்பதையும், இந்தியத் தலைமையமைச்சரிடம் கடிதம் கொடுத்திருப்பதையும் மட்டுமே நம்பி தமிழ்நாடு அரசு ஏமாந்து விடக்கூடாது!

கடந்த காலத்தில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் உச்ச நீதிமன்றத்தில் புதிய அணைகளுக்குத் தடை கோரி தமிழ்நாடு அரசு போட்டிருந்த வழக்கையும் மீறி இந்திய அரசின் முறைப்படியான ஒப்புதல் பெறாமலே, கர்நாடகம் கட்டிய அணைகள்தான் ஏமாவதி, ஏரங்கி, கபிணி, அர்க்காவதி போன்றவை. இந்திய அரசு அந்த சட்ட விரோத அணைகளைத் தடுக்கவில்லை. இப்போதும், அதே போல் இந்திய அரசின் மறைமுக ஆதரவுடன் கர்நாடகம் மேக்கேத்தாட்டு அணை கட்ட வாய்ப்பிருக்கிறது.

மேக்கேத்தாட்டில் 67 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவு அணை கட்டி விட்டால், சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது. எனவே, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களும் “மேக்கேத்தாட்டைத் தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” என்ற முழக்கத்தை எழுப்பி, “காவிரி எழுச்சி நாள்” கடைபிடிக்க வேண்டும். இதில் அனைத்துக் கட்சிகளையும், உழவர் அமைப்புகளையும், மக்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அழைக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக்குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

“மேக்கேத்தாட்டைத் தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” என்ற தலைப்பில், பூம்புகாரிலிருந்து மேட்டூர் அணை வரை 11.11.2019 முதல் 20.11.2019 வரை ஊர்திகளில் சென்று பரப்புரை செய்வதென்று காவிரி உரிமை மீட்புக் குழு ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. தொடர்ந்து அடைமழைப் பெய்யுமென்று வானிலை அறிக்கைகள் கூறுவதால், அந்தப் பரப்புரைப் பயணத்தை 2020 சனவரி 3-இல் பூம்புகாரில் தொடங்கி சனவரி 9-இல் மேட்டூரில் நிறைவு செய்யும் வகையில் மாற்றியமைத்துக் கொள்வதென்று காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

அனைத்துப் பகுதி மக்களும் இப்பரப்புரைக்கு ஆதரவளிக்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்