கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வடக்கு மக்களை மீட்டெடுப்போம்! – அநுரகுமார சபதம்

“வடக்கு மக்களே அதிகமாக கடன் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றார்கள். எனவே, அவர்களைக் கடன் சுமையிலிருந்து மீட்கும் நடவடிக்கையும், ஆறு ஆண்டுகளில் சர்வதேசக் கடன்களில் இருந்து இலங்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டமும் எம்மிடம் உள்ளன. நாம் ஆட்சிக்கு வந்தால் இதனைக் கட்டாயம் செய்தே தீருவோம்.”

– இவ்வாறு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

திகாரி நகரில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஊழல், மோசடிகள் நிறைந்த நாட்டை மீட்டெடுக்க புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கவே நாம் முயற்சிக்கின்றோம். அதேபோல் சகல இன மத மக்களையும் இணைத்துக்கொண்டு ஐக்கிய இலங்கைய உருவாக்க வேண்டும் எனவும் நாம் விரும்புகின்றோம்.

தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் வெளியிட்டுள்ளோம். ஏனையவர்களும் அவ்வாறே வெளியிட்டு வருகின்றனர். எனினும், இதில் யார் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பதே கேள்வி. இதுவரை காலமாக வாக்குறுதிகளைக் கொடுத்தவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு முரணாகவே செயற்பட்டனர். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்தால் எமது விஞ்ஞாபனத்தில் கூறிய விடயங்களை அவ்வாறே நிறைவேற்றுவோம்.

எமக்கும் மக்களுக்குமான நெருக்கமே எமது கொள்கை. இன்று நாடு பாரிய கடன் நெருக்கடியில் உள்ளது. அடிப்படைத் தேவைகள் எவையும் மக்களுக்கு வழங்க முடியாத ஆட்சியே கொண்டுசெல்லப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இருந்து நாட்டினையும் மக்களையும் மீட்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கைப் பின்பற்றத் தவறும் அனைவரும் நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள். இது சாதாரண மக்களுக்கு மட்டும் அல்ல, ஜனாதிபதிக்கும் பொருந்தும். எமது ஆட்சியில் சட்டவாக்கத் துறைகள் அனைத்துமே மீள் சீரமைப்பு செய்யப்படும்.

தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இன்று ஒரு சமூகத்தை நோக்கி இன்னொரு சமூகம் தாக்குதல் நடத்தும் நிலையே உருவாகியுள்ளது. முஸ்லிம் இனவாதமும், சிங்கள இனவாதமும் இரண்டு சமூகங்களையும் நாசமாக்கி வருகின்றது. இதைத் தடுத்துநிறுத்த ஜெனரல்கள் தேவையில்லை. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசியல்வாதிகளின் கடமை. எந்தச் சமூகத்திலும் இனவாதக் குழுக்கள் உருவாக நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

மக்களிடம் நாம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், எந்த இனச் சமூகத்திலாவது அவர்களின் இனத்துக்குள் ஒரு அடிப்படைவாதக் குழு உருவாக்கப்பட்டால் அதனை மக்களே கண்டறிந்து இல்லாமல் செய்ய வேண்டும். மதச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்க வேண்டும். இதில் எந்தவிதத் தடைகளும் இருக்கக்கூடாது. மதம் என்பது அவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நாம் நிராகரிக்க முடியாது.

தைப்பொங்கல் நாட்களில் தமிழர்களின் வீடுகளில் பொங்கல் உண்ண எமக்கு விருப்பமாக இருக்கின்றது. ரமழான் காலங்களில் முஸ்லிம் வீடுகளில் சென்று நோன்புக்கஞ்சி அருந்த நாம் விரும்புகின்றோம். புதுவருடக் காலங்களில் சிங்களவர்களின் வீடுகளில் ஏனைய மதத்தவர் வந்து உணவு உண்ண வேண்டும் என விரும்புகின்றோம்.

அவ்வாறு இருக்கையில் தமிழ்ப் பெண்ணை பார்த்து குங்குமப்பொட்டை அழித்துக்கொள் என்றோ, முஸ்லிம் பெண்ணைப் பார்த்து பர்தாவை அணியாதே எனக் கூற எவருக்கும் அதிகாரம் இல்லை.

கடந்த காலங்களில் இந்த நாடு பாரிய மோதல்களுக்கு முகங்கொடுத்துவிட்டது . இனியும் அவ்வாறான நிலையை உருவாக்காது நாட்டை நாம் முன்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். இதில் சகல மக்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்