இராணுவ ஆட்சியூடாக ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறார் கோட்டாபய

“இந்த நாட்டில் இராணுவ ஆட்சியூடாக கொலைக்குற்றங்களுக்கும் ஊழல், மோசடிகளுக்கும் உள்ளாகியுள்ள ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாக்க முயல்கின்றார் கோட்டாபய ராஜபக்ச. இதற்கு எவரும் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.”

– இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

போரில் பாதிக்கப்பட்ட அங்கவீன இராணுவத்தினரை இன்று சந்தித்து அவர்களுடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போரை வெற்றிகொண்ட பின்னர் மஹிந்த ராஜபக்சவை மண்டேலாவைக்குவதே எனது நோக்கமாக இருந்தது. மஹிந்த ராஜபக்சவும் அதற்குத் தயாராக இருந்தார். ஆனால், கோட்டாபய ராஜபக்சவின் இராணுவ சிந்தனையும் தவறான நோக்கமுவே மஹிந்த ராஜபக்சவை ரொபேர்ட் முகாபேயாக்க காரணமானது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தொப்பிக்கல பகுதியையும் தோராபோரா மலையையும் எமது இராணுவம் கைப்பற்றியது. இது தலிபான்களின் சித்தார்த்தத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட பெயர். அவ்வாறான முக்கியமான மலையை எமது இராணுவம் பிடித்தது. அதுமட்டுமல்ல 2009ஆம் ஆண்டு பிரபாகரன் கொல்லப்பட்ட வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னுடன்தான் முதலில் தொடர்புகொண்டு பேசினார். ஊடகங்கள் முன்னிலையில் உரையாற்ற என்னையே அனுப்பினார். ஆங்கிலத்திலும் பேசி தூதரகங்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதற்கமைய நான் செயற்பட்டேன்.

நானும் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவன். ஜே.வி.பியின் தாக்குதலுக்கும் இரண்டு தடவைகள் முகங்கொடுத்தேன். எனினும், இன்று பாதிக்கப்பட்ட இராணுவத்தினரைப் பார்க்கையில் இவர்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். கைகளை இழந்த இராணுவத்தினருக்கு பொய்க்கைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தை நான் முன்னெடுத்துள்ளேன். இது தொழிநுட்ப ரீதியில் உண்மையான கைகளைப் போன்றே தோற்றமளிக்கும். இவை இராணுவத்தினருக்கு மிகவும் முக்கியமானவை.

போரை வெற்றி கொண்ட இராணுவத்தினருக்கு முன்னைய அரசு எதனையும் செய்யவில்லை. ஏனைய சிலருக்கு செய்ததைக்கூட இராணுவத்தினருக்குச் செய்யவில்லை. ஆனால், எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இராணுவக் கிராமமே உருவாக்கப்பட்டது. சம்பளம் அதிகரிக்கப்பட்டது. கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று எமது அரசு இராணுவத்தினரை சரியாகப் பராமரித்து வருகின்றது. அவர்களுடன் அரசியல் செய்ய நாம் விருபவில்லை. நாம் அவர்களை இராணுவ வீரர்களாக – நாட்டின் காவலர்களாக வைத்திருக்கவே விரும்புகின்றோம். எனினும், இராணுவ வீரர்களே எம்மை இன்று அழைத்துள்ள நிலையில் அதனை நிராகரிக்க முடியாத காரணமும் உள்ளது.

பாதிக்கப்பட்ட இராணுவத்தினருடன் பேசி அவர்களின் நிலைமைகளை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களை வைத்து கோட்டாபய ராஜபக்சதான் அரசியல் செய்தார். எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன. அந்தவேளையில் சஜித் பிரேமதாஸ களத்துக்கு வந்ததை அறிந்துகொண்டு கோட்டாவாதிகள் நாடகமாடியதை நாம் அறிந்துகொண்டோம். ஆனால், நாம் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களைக் கொண்டு அரசியல் செய்யவில்லை. எமக்கு அதற்கான தேவையும் இல்லை. அனைவரும் எம்முடம் இருங்கள். நாங்கள் இராணுவ வீரர்களைப் பாதுகாப்போம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்