காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் இடைக்கால கொடுப்பனவு – அரசாங்கம்!

காணாமற் போனவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள மரணச் சான்றிதழை இரத்து செய்து அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 6000 ரூபாய் வீதம் இடைக்கால நிவாரண கொடுப்பனவை வழங்குதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரம் நிதி அமைச்சர் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அரச மொழி சமூக நல்லிணக்கம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் மரண சான்றிதழை இரத்து செய்து வழங்கப்படும் ‘காண முடியாமைக்கான சான்றிதழு’க்கான செல்லுபடியான கால எல்லை, 2 வருடம் மாத்திரம் என்பதினால், சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ள காணாமற்போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேணடியுள்ளது.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இல 19 கீழான இறப்பு பதிவை மேற்கொள்ளல் சட்டத்தின் 2ஆவது சரத்தின் கீழ், சம்பந்தப்பட்ட மரண சான்றிதழ் வழங்கப்பட்டிருக்குமாயின் காண முடியாமைக்கான சான்றிதழைப் பெற்ற அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்