நில அளவை திணைக்களத்தின் நடவடிக்கை குறித்து தேர்தல் அதிகாரியிடம் முறைப்பாடு!

வன்னி மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தின் தேவைகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளை, நில அளவை திணைக்களம் மேற்கொண்டுள்ளமை தேர்தல் விதி முறைகளிற்கு முரணானது என வவுனியா அரச அதிபரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர். சி.சிவமோகன் அளித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “நில அளவைத் திணைக்களத்தின் அத்தியட்சகரின் உத்தரவிற்கமைய பொது மக்களின் காணிகளை அளவீடு செய்து இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இது தேர்தல் விதிமீறலாகவே அமையும்.

ஏனெனில் ஒரு பகுதிக்கு எதிராக பொதுமக்களை திசைதிருப்பி விடுகின்ற செயற்பாட்டையே இந்த நில அளவை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

தேர்தல் காலம் என்பதால் மக்கள் ஒன்றுகூட முடியாத சூழலில் அதற்கு எதிராக பொதுமக்களை களமிறக்க  முடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.

எனவே பொதுமக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் நில அளவை திணைக்களம் ஈடுபட்டுள்ளது.  எனவே தேர்தல் காலங்களில் இவ்வாறான வேலைதிட்டங்களை குறித்த திணைக்களம் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்