13 அம்சக் கோரிக்கைகளையும் அடையும்வரை போராடுவோம்! மாவை சேனாதிராசா உறுதி

பல்கலைக்கழக மாணவர்களும் 6 கட்சிக் கூட்டுக்களும் இறுதியில் 5 கட்சிக் கூட்டுக்களும் முன்வைத்த கோரிக்கைகள் நியாயபூர்வமானவை. அவை அனைத்தும் எமது தமிழரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு உட்பட்டவை. யார் ஜனாதிபதியாக வந்தாலும் அந்தக் கோரிக்கைகளை அடையும்வரை நாம் போராடுவோம். இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு மக்கள் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுடன் இன்று சந்திக்கின்றோம் அதன்பின்னர் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிப்போம்.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா.

இன்று பிற்பகல் ‘தமிழ் சி.என்.என்.’ அலுவலகத்துக்கு சமுகமளித்த அவரிடம் எமது ஊடகவியலாளர் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக எழுப்பிய வினாவுக்கே  இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

பல்கலைக்கழக மாணவர்கள் சகல கட்சிகளையும் இணைத்து எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. அதில் ஆரம்பத்தில் 6 கட்சிகள் பேச்சில் ஈடுபட்டோம். ஒரு கட்சி தன்னிச்சையாக தமது முடிவை அறிவித்துக்கொண்டு இடையில் முறித்துவிட்டது.

பின்னர் 5 கட்சிகள் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியுடன் 13 அம்சக் கோரிக்கையை முன்வைத்து பேச்சுக்களை நடத்தினோம். இன்று பிற்பகல் 4 மணிக்கு இறுதிச் சந்திப்பு உள்ளது.

அதற்கு முன்னர் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று தன்னிச்சையான ஒரு முடிவை அறிவித்துள்ளார். நாம் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் தீர ஆராய்ந்து இன்றைய சந்திப்பின் பின்னர் அதில் எடுக்கப்படும் முடிவை அறிவிப்போம். பல்கலைக்கழக மாணவர்களுடனான இறுதிக்கூட்டத்துக்கு முன்னர் எம்மால் எந்த முடிவும் அறிவிக்கமுடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்