விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

யா/மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இன்று(30.10.2019)இடம்பெற்றது.
வித்தியாலய முதல்வர் சு.சிவானந்தன் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில், பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சோமசுந்தரம் திருக்குமரன், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் திருமதி தமயந்தி சிவபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரான்ஸ் பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிகழ்வில், 167 புள்ளியைப் பெற்ற செல்வன் செந்தூரசர்மா சிந்துஜசர்மா மற்றும் 70 புள்ளிகளுக்கு மேலான புள்ளிகளைப் பெற்ற 7 மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த திருமதி நித்தியரூபி தேவவிநோதன் ஆசிரியரும் பாடசாலைச் சமூகத்தால் பொன்னாடை போர்த்தி இதன்போது கௌரவிக்கப்பட்டார்.
செல்வன் சி.சிந்துஜசர்மாவுக்கு பிரான்ஸ் பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தின் கல்வி ஊக்குவிப்பு நிதியாக 25 ஆயிரம் ரூபா நிதியும், ஆசிரியர் சுப்பிரமணியம் ஞாபகார்த்த நிதியத்தின் 5 ஆயிரம் ரூபா கல்வி ஊக்குவிப்பு நிதியும் இதன்போது வழங்கப்பட்டன.
 சி.சிந்துஜசர்மாவுக்கான 25 ஆயிரம் ரூபா அன்பளிப்பு நிதியை பிரான்ஸ் பழைய மாணவர் ஆசிரியர் சங்க உறுப்பினர் திரு.கோவிந்தசாமி அற்புதநாதன் அன்பளிப்புச் செய்திருந்தார்.
செல்வி அற்புதரஞ்சினி ஞாபகார்த்த நிதியத்தின் கற்றல் உபகரணங்களும், பிரான்ஸ் பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தின் கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வின்போது, கல்வி ஊக்குவிப்புத் தேவைக்குரிய இரு மாணவர்களுக்கான உதவு தொகைகளும் வழங்கப்பட்டன.
செல்வன் சந்திரகுமார் அசோகிற்கான 6 ஆயிரம் ரூபா உதவு தொகையை பிரான்ஸ் பழைய மாணவர் ஆசிரியர் சங்க செயலாளர் திருமதி  அனந்தராணி பாஸ்கரன் அவர்கள் அன்பளிப்புச் செய்திருந்தார்கள்.
செல்வி சின்னத்துரை ஜிந்துஜாவுக்கு 10 ஆயிரம் ரூபா உதவு தொகையை திரு. கதிரவேலு குணசீலன் மற்றும் திருமதி கலாரஞ்சனி குணசீலன் தம்பதிகள் அன்பளிப்புச் செய்திருந்தனர்.
மேலும், இதன்போது சாவகச்சேரி மக்கள் வங்கியானது மாணவர்களுக்காக புத்தகப் பைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்