அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது? – ஜனாதிபதிக்கு சி.வி. கடிதம்

நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் ஏன் விடுதலை செய்ய முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், குறித்த கடிதத்திலேயே இவ்வாறு கோள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இத்தருணத்தில் எந்த விதமான எதிர்ப்பும் உருவாகப் போவதில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்ககூட இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்றும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி என்னால் அனுப்பப்பட்ட கடிதத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நான் உங்களுக்கு தெரிவித்திருந்தேன். இக்கடிதம் கிடைக்கப்பெற்றதென நீங்கள் எனக்கு அறிவித்திருந்தபோதிலும் இது தொடர்பாக எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்மையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் குறிப்பிட்ட புனர்வாழ்வு காலப்பகுதிக்கு பின்னர் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வேன் என தெரிவித்திருந்தார். இதையே தான் நான் உங்களிடம் கோரியிருந்தேன் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் உங்களை ஜனாதிபதியாக்கிய எங்களுக்கு அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பெறும் ஆறுதலாக அமையும் என்பதை குறிப்பிட்டு தெரிவிக்க விரும்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்