வவுனியாவில் பாரிய கடத்தல் முயற்சி முறியடிப்பு : ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை வாகனமொன்றில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்று (31.10.2019) வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபய விக்கிரம அவர்களின் ஆலோசனைக்கமைய வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் கீழ் செயற்படும் போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று காலை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறியொன்றை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில் 1498.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் வாகனத்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைப்பற்ற பீடி இலைகள் இந்தியாவிலிருந்து கப்பல் மூலமாக மன்னாருக்கு எடுத்து வரப்பட்டு மன்னாரிலிருந்து பூநகரி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்து கிளிநொச்சி , வவுனியா ஊடாக நீர்கொழும்பு நோக்கி எடுத்துச் செல்லப்படவிருந்த சமயத்திலிலேயே வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் கைப்பற்றியதாகவும் வாகனத்தினை சோதனையிடும் சமயத்தில் பொலிஸார் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக வாகனத்தின் பின்பகுதி முழுவதும் புகையிலை அடங்கிய 16 பைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த லொறி சாரதியான தேவவுவ பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் நடவடிக்கையில் மது ஒழிப்பு பிரிவு உதவி பொலிஸ் பரிசோதகர் டி.என் மாரசிங்க மற்றும் பொலிஸ் சார்ஐன்களான காமினி (24907) , சமன் (34110) பொலிஸ் கொஸ்தபர்களான நிமல் (60064) , பலமுகேதர (82346) , பிரசன்ன (82662) , நலிந்த (80721) ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கிட்டத்தட்ட 45லட்சம் பெறுமதி வாய்ந்தவை என பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்