உள்ளூராட்சி மன்ற வெற்றியை கூவி திரியும் மொட்டு, அந்த வாக்கு எத்தகையது…?

இன்று மொட்டு வெற்றி பெறுமென கூறுவோர், அது கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை முன் வைத்தே பேசுவர். வெளித் தோற்றத்தில் பார்க்கும் போது, அதுவும் நியாயம் தானே என்றெண்ண தோன்றும். உண்மை அதுவல்ல. அந்த வாக்கு எத்தகையது என சிந்திக்கும் போது மஹிந்தவின் வெற்றி எத்தகைய கடினமானதென்பதை சாதாரணமாக அறிந்துகொள்ள முடியும்.

வாக்காளர்களை இரு அணியினராக வகுக்கலாம். ஒன்று ஒரு குறித்த கட்சியின் நிலையான வாக்காளர்கள். இரண்டாவது குறித்த சந்தர்ப்பத்தில் சரி, பிழை ஆராய்ந்து வாக்களிக்கும் மிதப்பு வாக்காளர்கள். ஒரு அணியின் நிலையான ஆதாரவாளர்களை யாரும் அசைக்க முடியாது. ஒரு கட்சியின் வெற்றிக்கு மிதப்பு வாக்காளர்களை கவருவது முக்கியமானது. மிதப்பு வாக்காளர்களே அதிகமுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.கவுக்கு 33 இலட்சமளமான நிலையான வாக்குள்ளது. இதனை எக் கொம்பனாலும் இதுவரை காலமும் அசைத்து பார்க்க முடியவில்லை. இனியும் அசைக்க முடியாதென்பது யாருமே கிஞ்சித்தேனும் கேள்வியெழுப்ப முடியாத உண்மை. ஆகவே, ஐ.தே.கவின் வாக்குகளை 33 இலட்சத்திலிருந்தே கணக்கிட வேண்டும். சிறுதொகை மிதப்பு வாக்காளர்களை ஐ.தே.க கவருமாக இருந்தால், அதற்கு வெற்றி வாகை சூட முடியும்.

இப்போது விடயத்துக்கு வருவோம். மொட்டுவுக்குள்ள நிலையான வாக்குகள் எத்தனை? மொட்டுவின் நிலையான வாக்கு வங்கி பூச்சியம். அனைவரும் மிதப்பு வாக்காளர்களே!மொட்டு வெற்றிபெற வேண்டுமாக இருந்தால், அவர்கள் மீண்டும் பூச்சியத்திலிருந்து வேலை செய்ய வேண்டும். அந்த வாக்குகள் எந் நேரத்திலும், எப் பக்கமும், எச் சிறு விடயத்தாலும் மாறலாம். தற்போது கோத்தாவின் மேடைப் பேச்சின் கம்பீரமற்ற போக்கால் நாளாந்தம் மொட்டு அணியினர் பாரிய வாக்குச்சரிவை சந்திப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். மிதப்பு வாக்கு வங்கி சடுதியாக அதிக வீதத்தில் கூடும், குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலப்பகுதியில் ஐ.தே.கவுக்கு வாக்களித்தவர்கள், அதன் நிலையான வாக்காளர்கள் மாத்திரமே என்று கூறினாலும் தவறாகாது. இப்போது ஜனாதிபதி வேட்பாளராக சஜித் களமிறங்கியுள்ளார். இதுவே ஐ.தே.க கணிசமான மிதப்பு வாக்காளர்களை கவர காரணமாக அமைந்துள்ளது. இது போன்ற இன்னும் பல விடயங்களை வைத்து நோக்கும் போது, இம் முறை பெருமளவான மிதப்பு வாக்குகளை ஐ.தே.க பெறும் வாய்ப்புள்ளதென்பது துல்லியமாகின்றதல்லவா?

மொட்டு அணியினர் வெற்றி பெறுவது அவ்வளவு இலகுவான விடமல்ல என்பதே உண்மை. அது தவிர்ந்து, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை வைத்து மொட்டு அணியினர் வெற்றிபெறுவார்கள் என கூப்பாடு போடுவது பொருத்தமானது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்