ஓமந்தையில் ஆலயத்தை துப்பரவு செய்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல்: சிறைச்சாலை சென்ற சிவசக்தி ஆனந்தன் எம்.பி

வவுனியா, ஓமந்தை மாளிகை கிராமத்தில் ஆலய காணியை துப்பரவு செய்யும் போது நிலத்துக்கு அடியில் உள்ள செங்கற்கள் மேலே கிளம்பி இருப்பதாக கூறி தொல்லியல் திணைக்களத்தினால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்றைய தினம் (31.10) ஆலய நிர்வாகத்தினர் இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை பார்வையிட்டு அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (01.11) மதியம் 2 மணியளவில் வவுனியா சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாளிகை கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தில் இருக்கக்கூடிய மாளிகை காட்டு விநாயகர் என்ற மிக பழமைவாய்ந்த விநாயகர் ஆலயத்தினுடைய காணிகளை துப்பரவு செய்தபோது வவுனியாவில் இருக்கின்ற தொல்பொருள் திணைக்களம் அந்த ஆலயத்தின் உடைய நிர்வாகத்திற்கு எதிராக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் குறித்த ஆலயத்தினுடைய தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் அகிலன் ஆகிய இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையிலேயே இந்த ஆலயமும், கிராமமும் வவுனியா மாவட்டத்திலே மிகவும் பழமை வாய்ந்த ஒரு கிராமம். அதேபோல இந்த ஆலயமும் புராதனமான பல நூற்றாண்டுகளை கொண்ட ஆலயமாகும். யுத்தம் காரணமாக இந்த ஆலயம் புனரமைப்பு செய்ய முடியாமல் இருந்தது. அரசாங்கத்திடமிருந்து நிதி கோரப்பட்ட நிலையில் நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் அந்த கிராம மக்கள் அறுவடை காலங்களில் ஒவ்வொருவருவரிடமிருந்தும் நெல் கொள்வனவு செய்து அப் பணத்தை வைத்துக் கொண்டு தான் இவ்வாலயத்தை துப்பரவு செய்திருக்கிறார்கள்.

இவ்வாலயம் துப்பரவு செய்யும் போது நிலத்திற்கு அடியில் இருந்த செங்கற்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் தொல்பொருள் திணைக்களத்தால் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே கடந்த நான்கரை வருட காலமாக அரசாங்கத்தினுடைய ஆட்சிக்காலத்தில் தொல்லியல் திணைக்களம் பல்வேறுபட்ட தமிழர்களுடைய, இந்துக்களுடைய ஆலயங்களை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களை சுவீகரிப்பதும், ஆலயங்களை இடிப்பதும், அத்துமீறுவதும் தொடர்ச்சியாக இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நான்கரை வருடகாலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

பாராளுமன்றத்திலும் கூட நான் இது தொடர்பாக பேசி இருக்கின்றேன். அதாவது இந்த தொல்லியல் திணைக்களத்திலே 32 பேர். இந்த உயர் சபையிலேயே இருக்கிற 32 பேரும் சிங்களவர்களாக இருக்கிறார்கள். ஒரு பௌத்த துறவி தான் இவர்களுக்கு பொறுப்பாக இருக்கிறார்கள். நேரடியாக ஜனாதிபதி இன்னும் சொல்லப்போனால் தற்சமயம் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்ற சஜித் பிரேமதாசாவினுடைய அமைச்சு இந்த தொல்லியல் சம்பந்தமாக தமிழ்மக்களுக்கு எதிராக தமிழ் மக்களினுடைய இடங்களிலே இந்த பௌத்த மயமாக்கல், காணிகளைச் சுவீகரித்தல் இவ்வாறான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே தேர்தல் காலத்திலும் கூட தொல்லியல் திணைக்களம் இந்த அப்பாவி கிராம மக்களை அதாவது இந்த ஆலயத்தை புனரமைக்க சென்ற மக்களை கைது செய்திருக்கின்றது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். இவர்கள் எந்தவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை. இந்த ஆலயம் தொல்லியல் திணைக்களத்திற்கு கீழ் இருக்கின்றது என்பதும் இவர்களுக்குத் தெரியாது. அவ்விடத்தில் தொல்லியற் திணைக்களம் தனக்குரிய பெயர் பலகையை போடப்படவில்லை.

அந்த வகையில் தங்களுடைய ஆலயத்தைப் புனரமைக்க சென்ற வேளையில் அவ் ஆலயத்தில் உடைய நிர்வாகத்தினரை தடுத்து வைத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும், இந்துக்களையும் தொடர்ச்சியாக இந்த தொல்லியல் திணைக்களம் இவ்வாறான தொந்தரவுகளை செய்து கொண்டிருக்கின்றது.

ஆகவே உடனடியாக ஜனாதிபதி அவர்கள் இவற்றுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சு, திணைக்களங்கள் பிரதான ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தினர் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அத்துடன் இவ்வாலயத்தை புனரமைப்பு செய்வதற்கு ஒரு விதமான இடையூறுகளையும் விளைவிக்கக் கூடாது என்பதுதான் கிராம மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது. எனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்