கொலைகாரக் கும்பலைத் தோற்கடிக்கவே சஜித்துக்கு நான் ஆதரவு வழங்கியுள்ளேன்! – அவரின் வெற்றி உறுதி என சந்திரிகா திடசங்கற்பம்

“கடந்த காலத்தில் ஊழல், மோசடிகள் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தும், கொலைக்கலாசாரத்தை அரங்கேற்றி நாட்டை இரத்தக்களறியாக்கியும் அட்டூழியம் புரிந்த கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கின்றது. இந்தக் கும்பலைத் தோற்கடிக்கவே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு நான் ஆதரவு வழங்கியுள்ளேன்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

சஜித்துக்கு சந்திரிகா ஆதரவு வழங்கியுள்ளார். இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே சந்திரிகா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டுசெல்ல நான் விரும்பவில்லை. அதனால்தான் சஜித்தின் கரங்களை நான் பலப்படுத்தியுள்ளேன்.

மூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு வாழ வேண்டும். அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சஜித் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

இந்தத் தேர்தலில் அவர் வெற்றியடைவார். அதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்